ஒரு டெஸ்ட் தொடர் இழப்பு ஒட்டுமொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது: ஷுப்மன் கில்
ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது ஒட்டுமொத்த அணியின் ஃபார்மினை தீர்மானிக்காது என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்றது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. அந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது.
இதையும் படிக்க: சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?
இந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணியின் மூத்த வீரர்கள் உள்பட பலரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், மூத்த வீரர்கள் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. இதனைத் தொடர்ந்து, உள்ளூர் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் விளையாட வேண்டும் என பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் பலரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினர்.
ஷுப்மன் கில் கூறுவதென்ன?
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது ஒட்டுமொத்த அணியின் ஃபார்மினை தீர்மானிக்காது என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு தொடர் ஒட்டுமொத்த அணியின் ஃபார்மினை தீர்மானிக்காது. பல்வேறு தொடர்களில் இந்திய அணியின் வீரர்கள் பலரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது, நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இருப்பினும், நாங்கள் நன்றாகவே விளையாடினோம்.
இதையும் படிக்க: இலங்கை தொடரில் விளையாடாமல் தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்; காரணம் என்ன?
துரதிருஷ்டவசமாக, கடைசி போட்டியின் கடைசி நாளில் ஜஸ்பிரித் பும்ராவால் விளையாட முடியவில்லை. கடைசி நாளில் பும்ரா விளையாடியிருந்தால், அந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருப்போம். பல்வேறு விமர்சனங்களும் எழுந்திருக்காது. ஒரு போட்டியோ அல்லது ஒரு நாளோ எங்களது ஆட்டத்தை தீர்மானிக்காது. இதற்கு முன்பாக, ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளோம். டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளோம். 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளோம் என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழப்பதற்கு முன்பாக, இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என டெஸ்ட் தொடரில் நியூசிலாந்திடம் வரலாற்றுத் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.