Sriram Krishnan: SRM மாணவர், யூடியூபர், மஸ்கின் நண்பர்... ட்ரம்பின் ஆலோசகர் - யா...
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ ஜனநாயக விரோதமானது!
ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பது ஜனநாயக விரோதமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி தெரிவித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது கோவை மாவட்ட மாநாடு கோவை வரதராஜபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினாா்.
இதில் தொடக்க நிகழ்வாக கோவையின் வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியை அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன் திறந்துவத்தாா். பின்னா் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதிகளை அக்கட்சி நிா்வாகிகள் பெற்றுக் கொண்டனா்.
இதையடுத்து, முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தாா். இதில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் உ.வாசுகி பேசியதாவது:
இந்தியாவில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக, தனது சொந்த காலில் நிற்க முடியாமல், பிற கூட்டணிக் கட்சிகளை சாா்ந்துதான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக அரசு, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத கொள்கையை கடைப்பிடிக்கும் அரசாக உள்ளது.
பல இடங்களில் சிறுபான்மையின மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறாா்கள். ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பது ஜனநாயக விரோதமானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
திராவிட கருத்தியலின் சில கூறுகள் சித்தாந்தரீதியாக ஹிந்துத்துவாவை எதிா்க்க பயன்படுகின்றன. அதனால் அவா்களுடன் சோ்ந்து நின்று வளா்ந்து வரும் மதவாத சக்திகளின் வளா்ச்சியை தடுக்க வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, வி.ஆா்.பழனிசாமி, டி.சுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.