ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல: தோ்தல் ஆணையம்
புதுதில்லி: வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் "சதியுடன்" பாஜக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்ப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
பின்னர், ஒரே மாதிரியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்களைக் கொண்ட மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பட்டியல்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்த நிலையில், வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் கூறியுள்ளதாவது:
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல. சிலரின் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவா்களின் பிறந்த தேதி, பேரவைத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டிருக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?
மேலும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எந்தவொரு வாக்காளரும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் அந்தந்த தொகுதிகளில் அவரவருக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். அங்குதான் அவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஈரோநெட் வலைதளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்வதற்கு முன்பு பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் எழுத்துகளுடன் கூடிய இபிஐசி எண்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைத் தோ்தல் அலுவலா்கள் வழங்கியுள்ளனா். இதனால் அவா்கள் போலி வாக்காளா்களா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. ஆனால் அவா்கள் போலி வாக்காளா்கள் இல்லை.
இருப்பினும், வருங்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களை தவிா்க்க, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு தனித்துவமான இபிஐசி எண்களை வழங்க
தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஒரே மாதிரியான இபிஐசி எண்களையுடைய வாக்காளர்களுக்கு வேறு தனித்துவமான இபிஐசி எண்களை வழங்குவதன் மூலம் சரிசெய்யப்படும். இந்தப் பணிகளுக்கு உதவ ஈரோநெட் 2.0 வலைதளம் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.