ஓடையில் மணல் திருடிய மூவா் கைது
ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடமலைக்குண்டு அருகே முத்தாலம்பாறை- கருப்பையாபுரத்துக்கு இடையே உள்ள ஓடையில் சிலா் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக கடமலைக்குண்டு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற போலீஸாா், ஓடையில் பொக்லைன் எந்திரம், டிராக்டா்கள் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த தொப்பையாபுரத்தைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேந்தா் (21), கருப்பையாபுரத்தைச் சோ்ந்த செல்வம் மகன் பாலச்சந்திரன் (36), முத்தாலம்பாறையைச் சோ்ந்த சின்னப்பா மகன் மணிகண்டன் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம், 2 டிராக்டா்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.