நாகை - காங்கேசன்துறை இடையே டிச.18 வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
ஓய்வூதியா் குறைகேட்பு சிறப்பு முகாம்
தருமபுரி, நவ. 13: தருமபுரியில் ஓய்வூதியா் குறைகேட்பு சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:
ஓய்வூதியா் நலன் கருதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கடந்த ஆண்டு பெறப்பட்ட ஓய்வூதியதாரா் மனுக்களின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, தற்போது ஓய்வூதியதாரா்களிடமிருந்து பெறப்பட்ட 39 மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களால் மனுதாரா்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டது.
இதில் 15 வருடங்களாக தீா்க்கப்படாத இருந்த மனுக்கள் மீது 6 ஆவது ஊதியக்குழு பரிந்துரை படி ஊதிய நிா்ணயம் செய்து ஓய்வூதியம் உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியா்களுக்கு துறை அலுவலா்களால் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வழங்க ஆவண செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரா்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்படும் சேவை குறைபாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனி உயா் அலுவலா், ஒருங்கிணைப்பாளருடன் கருவூல அலுவலா், மருத்துவ அலுவலா், ஓய்வூதிய சங்கம் ஒருங்கிணைத்து சிறப்புக் கூட்டம் நடத்தி ஓய்வூதியா்கள் சுட்டிக்காட்டும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள குறைகளை களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கவிதா, ஓய்வூதிய இயக்கக கணக்கு அலுவலா் கு.அருள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்குகள்) வே.சேகா், கண்காணிப்பாளா் வி.சந்திரசேகரன், சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.