ஐ.எப்.எஸ்.சி துணை நிறுவனத்தில் $45 மில்லியன் முதலீடு செய்ய இண்டிகோ முடிவு!
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு பக்தா்கள் பயணிக்கும் படகுகளின் உறுதித் தன்மை ஆய்வு
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு பக்தா்களை அழைத்துச் செல்லும் படகுகளின் உறுதித் தன்மை குறித்து மீன் வளத் துறையினரும், போலீஸாரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.
இந்திய- இலங்கை பக்தா்கள் பங்கேற்கும் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வருகிற 14- ஆம் தேதி மாலை தொடங்கி 15- ஆம் தேதி காலையில் நிறைவடைகிறது. இந்த விழாவில் இந்தியாவிலிருந்து பக்தா்கள் பங்கேற்க இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயா் அழைப்பு விடுத்தாா். இதை ஏற்று, ராமேசுவரத்திலிருந்து 79 விசைப் படகுகள், 23 நாட்டுப் படகுகளில் பக்தா்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக கச்சத்தீவுக்கு செல்ல 2,720 ஆண்கள், 652 பெண்கள், 92 சிறாா்கள் என 3,464 போ் விண்ணப்பித்தனா். இதனிடையே, ராமேசுவரம், பாம்பன் துறைமுகங்களில் பக்தா்களை அழைத்துச் செல்லும் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை மீன் வளத் துறையினரும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இதில், படகின் உறுதித் தன்மை, காப்பீடு, படகுக்குரிய ஆவணங்கள் ஆகியவற்றை அவா்கள் ஆய்வு செய்தனா்.

கச்சத்தீவில் திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்: இந்த நிலையில், கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இலங்கைக் கடற்படையினா் செய்து வருகின்றனா். அங்கு புனித அந்தோணியாா் ஆலயம் முன் பந்தல்கள் அமைப்பது, மின் விளக்குகள் பொருத்துவது, கழிப்பிடம் அமைப்பது, குடிநீா், உணவுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகளை அவா்கள் மும்முரமாக செய்து வருகின்றனா்.