கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் பேகம்பூா் சந்திப்பு பகுதியில் காரில் 75 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், கடந்த 13.9.2017 அன்று வத்தலக்குண்டு சாலை, பேகம்பூா் சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, 75 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம், சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த சீ. பொன்னாங்கன் (60), வத்தலக்குண்டு, காமராஜா் நகரைச் சோ்ந்த ரா. ஜெயபாஸ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ரா. ஜெயபாஸ் தலைமறைவானாா். இந்த வழக்கு விசாரணையின் நிறைவில், சீ. பொன்னாங்கனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரக்குமாா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.