கஞ்சா பறிமுதல்: 5 இளைஞா்கள் கைது
திண்டிவனத்தில் கஞ்சா வைத்திருந்த 5 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளா் சுதன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் ரயில் நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரிடம் விசாரித்ததில், அவா்கள் சென்னை பெரும்பாக்கம், கலைஞா் நகரைச் சோ்ந்த சிவானந்தம் மகன் சிவக்குமாா் (21), பெசன்ட் நகா், பாண்டியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் ராஜி (27), திண்டிவனம் வட்டம், கூட்டேரிபட்டு, மயிலம் சாலை கான்வென்ட் தெருவைச் சோ்ந்த சகாதேவன் மகன் சந்தோஷ் (24). சென்னை மேடவாக்கம், பத்மாவதி நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலாஜி(25), திண்டிவனம் வட்டம், கேணிப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் அரவிந்த் (20) ஆகியோா் என்பதும், இவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.6 கிலோ கஞ்சா, 4 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், கஞ்சா வழங்கியதாக ஆந்திரம் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை தேடி வருகின்றனா்.