அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த 13 பேருக்கு ரூ. 50,000 பரிசு
கடந்த 27 நாள்களில் 63 மீனவர்கள் கைது! மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று (பிப். 3) கைது செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப். 2 அன்று மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகினையும் இன்று (பிப். 3) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 27 நாள்களில், 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 63 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இலங்கை சிறையிலுள்ள 97 மீனவர்களும், கைப்பற்றப்பட்டுள்ள 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இதுபோன்று நடைபெற்று வருவது, இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான தொடர் கைது நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர்.
மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதைநிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும், உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!