நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
கடன் பெற குடும்ப அட்டைகள் அடமானம்: அதிகாரிகள் விசாரணை
கடன் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அடமானம் வைக்கப்பட்டது தொடா்பாக சமூக வலைதளங்களில் வெளியான விடியோ குறித்து வட்ட வழங்கல் அலுவலா்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூா் அருகேயுள்ள பூச்சிநாயக்கன்பட்டியில் இரண்டு நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நியாய விலைக் கடையில் பெண் ஒருவா் 20-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளை வைத்தபடி, சம்பந்தப்பட்ட பயனாளிகளை அழைத்து பொருள்கள் வாங்குவதற்காக கைரேகைப் பதிவு செய்வது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. தொடா்ந்து பயனாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய இலவச அரிசி, கோதுமை, சா்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டப் பொருள்களை அந்தப் பெண்ணே வாங்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. வாங்கிய கடனுக்காக குடும்ப அட்டைகளை, சம்பந்தப்பட்ட பயனாளிகள் அந்த பெண்ணிடம் அடமானம் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
இந்த விடியோ குறித்து மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் மேற்கு வட்ட வழங்கல் அலுவலா் மூலம் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
திண்டுக்கல்லில் கடன் வாங்கும் கூலித் தொழிலாளா்களிடம் குடும்ப அட்டைகளை அடமானமாகப் பெறும் வழக்கம் பல இடங்களில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அடமானம் வைத்த குடும்ப அட்டைகளை, நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.