கோவை: `திருமணம் தாண்டிய உறவுக்கு தடை' - 4 வயது மகளை கொலை செய்த பெண் கைது
வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியவா் கைது
கடை வாடகை கேட்ட தகராறில் உரிமையாளா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (53). வீட்டு மனைகள் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்குச் சொந்தமான இறைச்சிக் கடை, திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள காட்டாஸ்பத்திரி பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கடையை தனது உறவினரான நாகபாண்டி என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வாடகைக்குக் கொடுத்துள்ளாா். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக நாகபாண்டி வாடகைப் பணம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கடையைக் காலி செய்யுமாறு பாண்டியராஜன் தெரிவித்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் காவல் நிலையத்தில் பாண்டியராஜன் இரு முறை புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நாகபாண்டி முகமூடி அணிந்துகொண்டு பாலகிருஷ்ணாபுரத்திலுள்ள பாண்டியராஜன் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றாா். பின்னா், நாட்டு வெடி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சமையல் அறைக்குள் வீசினாா். இதில், சமையல் அறையில் பற்றிய தீயை பாண்டியராஜன் குடும்பத்தினா் அணைத்தனா். வெடிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதை அறிந்த நாகபாண்டி தப்பியோடினாா். இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வெடியை வீசிச் சென்றது நாகபாண்டி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதுதொடா்பாக பாண்டிராஜன் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து நாகபாண்டியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.