அண்ணா பல்கலை.யில் பாலியல் புகார்: மாணவர்கள் போராட்டம் வாபஸ்!
கடற்கரைக்கு இலவச பேருந்துகள்; விதிமீறல்களுக்கு தானியங்கி அபராதம்! – புத்தாண்டுக்கு தயாரான புதுச்சேரி
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவன சங்கத்தினருடனான காவல்துறை ஆலோசனை கூட்டம் அதிதி ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. காவல்துறை ஐ.ஜி அதித்குமார் சிங்லா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வியாபாரிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம். தொடர்ந்து பேசிய அவர், ``வியாபாரிகள் தங்களின் குறைகளை கூற வேண்டும். அப்படி அவர்கள் சொல்லும் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அப்போதுதான் அமைதி நிலவும், அதனால்தான் குறைதீர்வு முகாம்கள் நடத்தி உயரதிகாரிகள் மக்களை சந்தித்து பேசுமாறு கூறியுள்ளேன்.
இரு தரப்பினரும் பங்களிப்பை செலுத்தினால் மட்டுமே சட்டம் ஒழுங்கு மேம்படும். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை பொதுமக்கள் சிரமமின்றியும், அதேசமயம் பாதுகாப்பாகவும் கொண்டாடுவதற்கு காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக பெண் போலீஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கான காவல்துறை ஹெல்ப் லைன் எண்களை அச்சடித்து விநியோகிக்க இருக்கிறோம். அதை வியாபாரிகளிடம் கொடுக்க இருக்கிறோம். வியாபாரிகளும் அந்த ஹெல்ப் லைன் எண்களை தங்களிடம் வரும் சுற்றுலாப் பயணிகளிடம் விநியோகம் செய்ய வேண்டும். காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக எடுத்திருக்கும் 450 ஹோம்கார்டுகள், போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பணியில் விரைவில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.
தற்போது பயிற்சியில் உள்ள அவர்களை 10 நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டப் பணியில் ஈடுபடுத்த இருக்கிறோம். அவர்களுடன் அலுவலகப் பணியில் இருக்கும் போலீஸாரையும் பயன்படுத்த இருக்கிறோம். இந்த புத்தாண்டுக்கு வாகனங்களை நிறுத்துவதற்கு 10 பார்க்கிங் இடங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். தற்காலிக காய்கறிக் கடைகள் சாலைகளை ஆக்கிரமிக்க கூடாது. அந்த விவகாரம் குறித்து நகராட்சியுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் பலகைகள், கழிவறை வசதிகளை செய்யும்படி நகராட்சிக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.
ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம், விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த தொழில் நுட்பம் மூலம் சாலை விதிகளை மீறுவோர் மீது தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறையை தீர்த்து மக்கள் சேவையாற்ற காவல்துறை தயாராக இருக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நகரப்பகுதி மற்றும் கடற்கரைக்கு பொதுமக்கள் வந்து செல்லும் வசதிக்காக 30 இலவசப் பேருந்து வசதி ஏற்பாடு செயப்பட்டுள்ளது. அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜீரோ உயிரிழப்பை நோக்கி ஜனவரி 1-ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும்” என்றார்.