கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
`கடற்கரையும் எனது தோழியும்..' ஒரு உண்மை அனுபவம் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
நான் எப்பொழுதாவது கடற்கரைக்குப் போவதுண்டு. எங்கள் ஊருக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை. நான் சந்தோஷமாய் அல்லது வருத்தமாய் இருக்கின்ற நாள்களில் மட்டுமல்ல. மனசுக்குத் தோன்றினால் போவதுண்டு. இது எனக்குக் கடந்த ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னிருந்து தோன்றிய பழக்கம். இது வரை 20 முறை சென்றிருப்பேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சில சமயம் பேருந்து. சில சமயம் மிதி வண்டி.
பேருந்தில் செல்லும்போது பார்ப்பன எல்லாவற்றையும் என் மனம் வர்ணிப்பது கதாசிரியர்களும் வர்ணிப்பது போலவே இருக்கும்.
இயல்பாகவே அப்படியா, இல்லை, படித்தது உள்சென்று காணாமல் போனது போல் போய் பின்னால் எப்போதாவது சுயமாய் சிந்திப்பது போல் கிளம்புமோ? என்று ஓர் ஐயம். இதனாலேயே சில சமயம் நான் சுயமாய் சிந்திப்பனவற்றைக் கூட எழுதவோ, சொல்லவோ தயங்குவதுண்டு.
கடலென்றால் ஒன்றும் ஆளை விழுங்குகிற அலைகளைக் கொண்டது இல்லை. ஓரடி உயர அலை கூட இருக்காது. அமைதியாய் தூங்குவது போல, சோர்ந்து போய் நடப்பது போல சலசலத்துக் கொண்டிருக்கும்.
கடற்கரையென்றால் வெள்ளை மணலும் கடலை ஒட்டிய பூங்காவும் வரிசையாய் தென்னை மரங்களும் என்றெல்லாம் கூறிவிட முடியாது. மணலெல்லாம் அழுக்கு நிறமாய், ஆங்காங்கே சில கருவேல மரங்களும், கருவாடு நாற்றமும் தான்.
இதனாலேயே நான் கடற்கரைக்குப் போகிறேனென்றாலே வீட்டில் எல்லோருக்கும் ஏளனச் சிரிப்பு தான் இருக்கும். இவர்களுக்கு கடல் என்றால், மணலும் பூங்காவும் சுண்டலும் தான்.
கடலின் கரையில் என்ன இருந்தால் என்ன? அதுவா முக்கியம்? நாலடி கடலுக்குள் நடந்து சென்று கட்டப்பட்டிருக்கும் ஒரு படகில் அமர்ந்து கொண்டால் போதும். அது இலேசாய்த் தாலாட்டும். தூரத்தில் கடலும் வானமும் சந்திக்கிறது போலத் தோன்றும் இடத்தில் தெரியும் விளிம்பில் மனது குவித்தால் போதும்.
வேறு என்ன வேண்டிக் கிடக்கிறது? விளிம்பில் அரைகுறையாய்த் தெரியும் பாய்மரக்கப்பல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிவரும் போது ஐந்தாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் உலகம் உருண்டை என நிரூபிக்க வரையப்பட்டிருந்த படம் நினைவிற்கு வரும்.
இதுவும் போதாவிட்டால் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் செம்பட்டைத் தலைச் சிறுவனின் திறமையையாவது வேடிக்கை பார்க்கலாம். எப்பொழுதாவது வெள்ளிக்காசு போல் துள்ளிக்குதிக்கும் சிறு மீன் கூட்டம் பார்க்கலாம். கடலின் ஈரக்காற்றை நுரையீரல் முழுக்க இழுத்து சுவாசிக்கலாம்.
மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் அனுபவிப்பதற்கான எனது கடற்கரை நோக்கிய பயணத்திற்கு இப்பொழுதெல்லாம் கூடுதலாக ஒரு காரணம் சேர்ந்து கொண்டது. அங்கு இருக்கிற என்னுடைய பழைய மாணவியையும் பார்த்து விட்டு வரலாம். (நான் அரசுப்பணிக்கான பயிற்சி அளிக்கும் பயிற்சி மையம் ஒன்றில் பயிற்சியாளர்) அந்தப் பெண் சற்று வித்தியாசமான மனோபாவம் கொண்டவள்.
அந்தப் பெண்ணுடனான எனது முதல் அறிமுகமே சற்று வித்தியாசமானது. நான் அப்பொழுது பட்டப்படிப்பெல்லாம் முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த காலம். தெருவில் நண்பனுடன் பேசிக்கொண்டிருந்த போது இந்தப் பெண் அணிந்திருந்த ஆடை, அணிகலன்களைப் பார்த்து கொஞ்சம் தவறாகவே நினைத்து இரண்டொரு வார்த்தை பேசி விட்டேன். அது அந்தப் பெண்ணின் காதில் விழுந்திருக்கம் என்றே நம்பியிருந்தேன்.
அடுத்த நாள் எங்கள் ஊரிலேயே அரசுப்பணிகளுக்கான தேர்விற்கான பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றில் பயிற்சியாளராக நான் வேலைக்காகச் சென்றபோது தான் அந்தப் பெண்ணும் அங்கு பயிற்சி எடுக்க வந்திருந்தாள். எனக்கு மிகுந்த சங்கடமான சூழ்நிலையாக இருந்தது. ஆனால், அந்தப் பெண் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. எனக்கு திருப்தியாக இருந்தது.
நான் வேலையில் சேர்ந்த பிறகும் அந்தப் பெண்ணைப் பற்றிய ஓர் அற்பமான எண்ணமே இருந்தது. ஆனால், நாளடைவில் அந்தப் பெண்ணின் நடத்தையில் எவ்விதமான ஒழுக்கக்கேடும் இல்லை என்பது எனக்குத் தெரிய வந்தது. பயிற்சியாளர் என்ற உறவை விட அந்தப் பெண்ணிடம் ஓர் அண்ணனாகவோ, தோழனாகவோ பழக முற்பட்டேன். அந்தப் பெண்ணிடம் இயல்பாகவே பெண்ணியம் பற்றிய புரட்சிகரமான சிந்தனைகள் இருந்தன.
பல்வேறு பொதுவான விஷயங்கள் குறித்து அந்தப் பெண்ணுடன் உரையாட அல்லது விவாதிக்க முடிந்தது. ஆன்மீகம், தமிழ் சினிமா, உலக சினிமா, அரசியல், மார்க்சியம் என எல்லாத் துறை பற்றிய தெளிவான அறிவுமிருந்தது.
நான் கல்லூரிப் படிப்பு முடியும் வரையிலும் கூட பெண்களைப் பார்த்த கண்ணோட்டத்தில் குறைபாடு இருந்ததைக் கூற வெட்கப்படுகிறேன். இந்தப் பெண்ணுடன் பழகத் தொடங்கிய நாள்களில் தான் பெண்ணை சக மனுஷியாய்ப் பார்க்கக் கற்றுக் கொண்டேன். அதற்குப் பிறகு எந்தப் பெண்ணைப் பற்றியும் தவறாகப் பேசியதும் இல்லை. பேசுவதைக் கேட்பதுமில்லை.
இந்த நாள்களில் தான் நான் அந்தப் பெண்ணிடம் கண்ணுக்கு உறுத்தாத ஆடை, அணிகலன், அலங்காரம் பற்றியும் வலியுறுத்தியது அதிகம். இந்த விஷயத்தில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. எளிமையே வாழ்க்கையின் தேவை என்பது பற்றியும் பேசியிருந்தேன்.
அந்தப் பெண் சக பயிற்சியாளர்களின் பார்வையில் அநாகரிகமாகவே தோற்றமளித்தாள். பயிற்சியின் போது சக பயிற்சியாளர்கள் ஏதாவது கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விட்டால் உடனே அழுது விடுவாள். தான் ஒரு இதய நோயாளி போல் உணர்வதாகவும் விரைவில் இறந்து விடுவேன் என்றும் என்னிடம் மட்டும் கூறுவதுண்டு.
இதை நான் சக பயிற்சியாளர்களிடம் கூறியபோது “நான் சரியான ஏமாளி” என்பது போல் என்னைப் பார்த்தார்கள். ஆனால், நான் அந்தப் பெண் கூறுவதை அலட்சியப்படுத்த விரும்பவில்லை. வகுப்பு முடிந்து செல்லும் போது “போகிறேன்” என்று கூறி விடைபெறும் போது ”போய் வருகிறேன்” என்று கூற வேண்டும் என்று சொல்வதுண்டு.
அந்தப் பெண்ணை இந்த ஆண்டில் கடற்கரைக்குப் போகும் போது இரண்டு முறை அவளின் வீட்டிலேயே சந்தித்து விட்டேன். இரண்டு முறையும் மிகவும் தோழமையுடன் நடந்து கொண்டாள். அப்பெண்ணின் அப்பா படகு செய்பவர். மீசையெல்லாம் பெரிய அளவில். மனதில் களங்கமில்லாததால் பயமில்லாமல் பேச முடிந்தது. அப்பெண் கடற்கரை வரைக்கும் என்னோடு நடந்து வருவாள். என் வாழ்வில் வயது வந்த பிறகு முதல் முறையாய் ஒரு பெண்ணுடன் இணையாய் நடந்தது அப்போது தான்.
ஆனால், நான் அன்று யாருக்காகவும் பயப்படவில்லை என்றே கூற வேண்டும். அந்தப் பெண்ணின் அம்மாவிடம் கூட அப்பெண்ணின் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறினேன். அந்தப் பெண் அப்போது “எனக்கென்ன உடம்புக்கு?“ “ஏன் நீங்க ஏதாவது கனவு கண்டீங்களா சார்?” என்று கேட்டுவிட்டு அட்டகாசமாய்ச் சிரித்தாள். எனக்கு ஏண்டா பேசினோம் என்றாகி விட்டது.
இன்றும் கடற்கரைக்குப் போகும் போதும் கூட அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அந்தப் பெண்ணின் வீட்டை அடையும் போது வீட்டின் முன் கூட்டமாய்த் தெரிந்தது. எனக்கு ஏனோ தப்புத் தப்பாய் மனசு பிதற்றிற்று. கடவுளே, அப்படி எதுவும் இருக்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டே சென்றேன்.
ஆனால், நிஜமாகவே அந்தப் பெண் இறந்து விட்டிருந்தாள். அப்பெண்ணின் அம்மா எனைப் பார்த்ததும் “உடம்பைப் பார்த்துக்கங்கண்ணு சொன்னியே, நேத்து கூட நெஞ்சு வலிக்குதுன்னு துடிச்சாளே, டாக்சி வண்டி புடிக்கக்குள்ளயும் போயிட்டாளே” என்று கதறினார்.
எனக்கு மனசை என்னவோ பண்ணியது. என்னை அறியாமல் என் கண்கள் விட்டு கண்ணீர் தளும்பியது. “நான் செத்துப்போனா நீங்க வருவீங்களா சார்?” என்று எப்போதோ அவள் கேட்டதை விளையாட்டாய் நினைத்தது வேதனையாய் இருந்தது. உடலை எடுக்கும் வரை நின்று விட்டு கடற்கரை சென்றேன். கடலிலேயே குளித்தேன்.
ஈர உடம்புடன் படகில் உட்கார்ந்து விளிம்பு பார்த்தேன். எப்பவும் போலவே கொஞ்சம் கொஞ்சமாய் உடல் காட்டும் பாய்மரப்படகு, துள்ளிக்குதிக்கும் மீன் கூட்டம், தூண்டில் போடும் சிறுவன், எல்லாம் அப்படியே.
இனிமேல் நான் கடற்கரைக்குப் போகும் போது ஒரே காரணம் தான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...