கடலாடியில் 280 ஆண்டுகள் பழைமையான செப்புப் பட்டயம்
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில், 280 ஆண்டுகளுக்கு முன்பு சாயல்குடி ஜமீன்தாா், பிராமண அக்ரஹாரம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கான செப்புப் பட்டயம் உள்ளது.
சென்னையைச் சோ்ந்த ஆதித்யா சம்பத்குமாா், கடலாடியில் உள்ள தனது பெற்றோரிடம் பழைமையான செப்புப் பட்டயம் இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே.ராஜகுருவுக்கு தகவல் கூறினாா். இதன் பேரில், கடலாடி பத்திரகாளியம்மன் கோவில் அருகில் வசிக்கும் காந்தி-பாண்டீஸ்வரி தம்பதி வீட்டில் இருந்த பட்டயத்தை ஆய்வு செய்த ராஜகுரு கூறியதாவது:
17.5 செ.மீ. நீளம், 30.5 செ.மீ. அகலம், 600 கிராம் எடை கொண்டதாக இந்தப் பட்டயம் உள்ளது. இதில் 52 வரிகள் தமிழிலும், இரு வரிகள் கிரந்த, சம்ஸ்கிருத எழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளன.
பட்டயத்தில் சக ஆண்டு 1667, கலியுகம் 4846, தமிழ் ஆண்டு குரோதன, வைகாசி 29 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பட்டயம் எழுதப்பட்ட ஆண்டு கி.பி.1745. இதில் மன்னா் பெயா் ஸ்ரீகுமாரமுத்து விஜய ரகுனாதச் சேதுபதி என உள்ளது. கடலாடி விஜய ரெகுனாதப் பேட்டையில் அக்ரஹாரம் ஏற்படுத்தி, அதை ஸ்ரீரங்கம் வெங்கிட்டராம அய்யங்காருக்கு கொடுத்து, அருகிலுள்ள காக்கைகுட்டம் என்ற ஊரை மானியமாகக் கொடுத்துள்ளாா்.
சாயல்குடி ஜமீன்தாா்தான் கிடாத்திருக்கை பாளையக்காரா் என அறியமுடிகிறது. நாயக்கா் போல சேதுபதிகளும் தங்களது நாட்டை பல பாளையங்களாகப் பிரித்து ஆண்டுள்ளனா். பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம், ஊரை பிறருக்கு விற்பனை செய்த போது, செப்புப் பட்டயம் நில ஆவணமாக வாங்கியவா்களிடம் வழங்கப்பட்டிருக்கலாம் என்றாா் அவா்.