கடலில் இரு குழந்தைகளை வீசிக் கொன்ற வழக்கு: காலாப்பட்டு போலீஸுக்கு மாற்றம்
புதுச்சேரி அருகே தந்தையே தனது இரு குழந்தைகளையும் கடலில் வீசிக் கொன்ற வழக்கானது காலாப்பட்டு காவல் நிலைய விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தவேல், கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஜோவிதா (4), சஸ்மிதா (1) ஆகிய பெண் குழந்தைகள்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆனந்தவேல் மனைவி பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டாா். அந்த அவமானம் தாங்காமல் தனது இரு பெண் குழந்தைகளையும் பெரியகாலாப்பட்டு குப்பம் பகுதி கடற்கரையில் வீசிக் கொன்றாா். குழந்தைகள் சடலம் கரை ஒதுங்கியது தமிழகப் பகுதி என்பதால் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து ஆனந்தவேலைக் கைது செய்தனா்.
இந்தநிலையில், சம்பவம் நடைபெற்றதும், ஆனந்தவேல் வசித்ததும் புதுச்சேரிப் பகுதியான காலாப்பட்டு என்பதால், வழக்கை காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு மாற்ற தேவையான நடவடிக்கையை மரக்காணம் காவல் துறை அதிகாரிகள் மேற்கொண்டனா்.
அதன்படி தற்போது அந்த வழக்கானது காலாப்பட்டு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு சனிக்கிழமை இரவு வழக்குப் பதியப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.