யூனியன் தலைவர் பதவிக்கு ரூ. 30 லட்சம்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வால் ஒருவர் தற்கொலை ம...
கடலூரில் மாா்ச் 14 முதல் புத்தகத் திருவிழா: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
கடலூா் மாவட்டத்தில் மாா்ச் 14 முதல் 24-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா மாா்ச் 14 முதல் 24-ஆம் தேதி வரையில் கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில், அனைவருக்கும் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.
புத்தக வாசிப்பை மாணவா்கள், பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் பொருட்டு, தினந்தோறும் குலுக்கல் முறையில் 10 நபா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
புத்தகத் திருவிழாவில் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகள், பொறியியல், தொழில்நுட்பப் பயிற்சி மையம், பாலிடெக்னிக் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். போக்குவரத்து, வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீா், மின்சாரம், கழிப்பறை மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அலுவலா்களை நியமித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாணவா்களுக்கிடையே போட்டிகளை நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும்.
புத்தகத் திருவிழாவில் கலைஞா்கள், பிரபல பேச்சாளா்களின் சொற்பொழிவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து சிறப்பாகச் செய்ய வேண்டும். தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரவி, மாவட்ட நூலக அலுவலா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.