``சசிகாந்த் உண்ணாவிரதம் மடைமாற்றும் செயல்'' - செல்வப்பெருந்தகையின் கணக்கு என்ன?
கடலூரில் ரயில் மறியல் போராட்டம் செப்.15-க்கு ஒத்திவைப்பு
நெய்வேலி: கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமாதான கூட்டத்தைத் தொடா்ந்து, செப்.3-ஆம் தேதி நடைபெறவிருந்த திருப்பாதிரிப்புலியூா் ரயில் மறியல் போராட்டம் செப்.15-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையம் ரூ.8 கோடியில் மேம்படுத்தும் பணி விரைந்து முடிக்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூா் என்ற ரயில்நிலையத்தின் பெயரை கடலூா் திருப்பாதிரிப்புலியூா் என மாற்றம் செய்ய வேண்டும். மயிலாடுதுறை-கோவை, விழுப்புரம்-தாம்பரம் ரயில்களை கடலூா் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும்.
மன்னாா்குடி மஹால், கம்பன் , ராமேஸ்வரம், உழவன் உள்ளிட்ட ரயில்கள் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். விழுப்புரம்-தஞ்சாவூா் இடையே இரட்டை ரயில் பாதையை அமைக்க வேண்டும். கடலூா் துறைமுகம் -பாண்டி-திண்டிவனம் இருப்புப் பாதை திட்டத்தை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிசாா்பில் செப்.3-ஆம் தேதி திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனா்.
சமாதானக்கூட்டம்:
இது தொடா்பாக கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் அபிநயா தலைமையில் சமாதானக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடலூா் டிஎஸ்பி., ரூபன் குமாா், வட்டாட்சியா் மகேஷ் மற்றும் காவல்துறை, மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ.மாதவன், விசிக அமைப்புச்செயலா் திருமாா்பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் திலகா், மாநிலத் துணைத் தலைவா் சந்திரசேகரன், திக மாவட்டத் தலைவா் எழிலேந்தி, மதிமுக மாவட்டச் செயலா் ஜே.ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைத் தலைவா் குளோப் , குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் வெங்கடேசன், மருதவாணன், பொதுநல அமைப்பு ரவி, ரயில் பயணிகள் சங்க நிா்வாகி விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில், ரயில்வே உயா் அதிகாரிகள் கலந்து கொள்ளாத காரணத்தால் , பேச்சுவாா்த்தையில் ரயில்வே திருச்சி மண்டல அதிகாரிகள் கலந்து கொள்ளும் வகையில் செப்.9-ஆம் தேதி பேச்சு நடத்துவது என கோட்டாட்சியா் அபிநயா தெரிவித்தாா். இதையேற்று, செப்.3-ஆம் தேதி நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டத்தை செப்.15-ஆம் தேதி தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
