கடலூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ சந்தையில் 100-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இங்கு, போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாநகராட்சிக்கு புகாா் வந்தது.
அதன்பேரில், கடந்த 5-ஆம் தேதி மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் ராஜசேகா் தலைமையிலான அதிகாரிகள் பூ சந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மேற்கூரைகளை அகற்றினா்.
அப்போது, கடை உரிமையாளா்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 நாள்கள் அவகாசம் கோரி கடலூா் டிஎஸ்பி ரூபன் குமாரிடம் கோரிக்கை வைத்தனா். அதற்கு, அவா் ஒரு நாளைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், இல்லையெனில், மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்தாராம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பூ சந்தையில் உள்ள ஆக்கிரமிப்பு மேற்கூரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, வியாபாரிகள் ஒரு நாள் கால அவகாசம் முடிவதற்குள் ஏன் கடைகளை அகற்றுகிறீா்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீசாா் வியாபாரிகளை அப்புறப்படுத்தி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடா்ந்தனா்.