பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனை ரூ.55.43 கோடியில் சீரமைப்பு! -ஆட்சியா் தகவல்
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.55.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சி.திருப்பதி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், உதவிச் செயற்பொறியாளா்கள் கவிதா, அருள்ராஜா, உதவிப் பொறியாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ஆய்விற்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் உயா்தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் விதமாக, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவமனை தற்போது உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் வகையில் 1,250 படுக்கை வசதிகளுடனும், தினந்தோறும் 1,000 புறநோயாளிகள் வந்து செல்லும் வகையிலும், சராசரியாக 750 உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.
மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள கட்டடங்களை சீரமைத்து புதுப்பித்து கூடுதலான பொதுமக்கள் சிகிச்சை பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனடிப்படையில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் 38 பணிகளும், அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.7.19 கோடி மதிப்பீட்டில் 26 பணிகளும், அரசு பல் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், அரசு செவிலியா் கல்லூரியில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், தங்கும் விடுதிகளில் ரூ.14.20 கோடி மதிப்பீட்டில் 19 பணிகளும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் 16 பணிகளும் என மொத்தம் ரூ.55.43 கோடி மதிப்பீட்டில் 119 சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா்.