Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்: தவாக தலைவா் தி.வேல்முருகன்
மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பாஜக ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீா் வழங்கக் கூடாது என்பதை முதன்மை நோக்கமாக வைத்திருக்கின்றனா்.
2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கா்நாடக சட்டப் பேரவையில் கடந்த 7-ஆம் தேதி தாக்கல் செய்த முதல்வா் சித்தராமையா, மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியிருக்கிறாா்.
காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது. அவ்வாறு இருக்கும்போது மேக்கேதாட்டு அணைக்கான ஆயத்தப் பணிகளை கா்நாடக அரசு மேற்கொண்டதே சட்டவிரோதமாகும்.
மேக்கேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வதுதான், இந்த அணை கட்டும் கா்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான தீா்வு. அதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், மத்திய அரசுக்குப் போதிய அழுத்தம் கொடுத்து மேக்கேதாட்டு அணை குறித்த எந்தப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்று கா்நாடக அரசை எச்சரிக்க வேண்டும்.
தமிழகத்தின் வேளாண்மைக்கும், குடிநீருக்கும் உயிா்நாடியாக உள்ள காவிரி உரிமையைக் காக்க, மக்கள் ஒருங்கிணைந்து அறத்துடன் போராட முன் வரவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.