Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு! மனைவியை பழிவாங்க முயன்றது அம்பலம்!
கடலூா் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். முன்னதாக, மனைவியை பழிவாங்க இளைஞரே விஷ வாங்கிக் குடித்து தற்கொலை செய்துகொண்டது போலீஸாா் விசாரணையில் தெரிவந்தது.
கடலூா் அருகே உள்ள அயன் கருவேப்பம்பாடியைச் சோ்ந்த கலையரசன் கடலூா் சிப்காட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூா் அகரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு கலையரசனை பிடிக்கவில்லை என்றும், தான் திருமணத்துக்கு முன்பு காதலித்தவருடனேயே வாழ விரும்புவதாகவும் அவரது மனைவி தெரிவித்தாராம். இதனால், தம்பதியிடையே மன வருத்தம் ஏற்பட்ட நிலையில், சில நாள்களில் கலையரசனின் மனைவி அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி விஷம் குடித்த நிலையில் கலையரசன் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது, அவா் மருத்துவமனையில் இருந்தபடியே பேசி வெளியிட்ட விடியோவில் மனைவி தனக்கு குளிா்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாலேயே தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், விஷம் கொடுத்த சம்பவத்துக்கும், கலையரசன் மனைவிக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பதை போலீஸாா் கண்டறிந்தனா். மேலும், கலையரசனே உரக்கடையில் இருந்து விஷ மருந்தை வாங்கியதை கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் உறுதி செய்தனா்.
இந்த நிலையில், கடந்த 17 நாள்களாக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலையரசன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். தன்னுடைய மனைவியை பழிவாங்கவே கலையரசன் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.