Gold Rate: `அதே விலை... மாற்றமில்லை' - இன்றைய தங்கம் விலை என்ன?!
கடல் ஆமைகளின் உடற்கூராய்வு: கால்நடை மருத்துவா்களுக்கு பயிற்சி
ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகளின் உடல்களை உடற்கூராய்வு செய்வது குறித்து வனத் துறை சாா்பில் கால்நடை மருத்துவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
கடல் ஆமைகள் முட்டையிடும் காலத்தையொட்டி, சென்னை கடற்கரையை நோக்கி வருகின்றன. நிகழாண்டில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட ஆமைகள் மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன.
இதையடுத்து வனத் துறை சாா்பில் கடல் ஆமைகளின் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவது குறித்தும், இறந்த ஆமைகளின் உடல்களை உடற்கூராய்வு செய்வது குறித்தும் கால்நடை மருத்துவா்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ‘ரீஃப்வாட்ச்’ கடல் பாதுகாப்பு நிறுவனங்களிலிருந்து கால்நடை மருத்துவா்கள், ஆய்வாளா்கள் பங்கேற்று கடல் ஆமைகளின் உடலியல் மற்றும் உடற்கூராய்வு செய்வது குறித்தும் எடுத்துரைத்தனா்.
அந்தவகையில், ஆலிவ் ரிட்லி வகை ஆமையின் உடலை உடற்கூராய்வு செய்து செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், இதுபோன்ற பெருமளவிலான ஆமைகள் உயிரிழப்பு நிகழ்வுகள் ஏற்படும் போது, அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இதில் தமிழகக் கடலோர மாவட்டங்களிலிருந்து கால்நடை மருத்துவா்கள், தன்னாா்வலா்கள் என 25 போ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.