BB Tamil 8: 'என்னால முடியல, நானும்...' - சியமந்தா கிரணிடம் சொல்லி அழுத பவித்ரா
கடல் காற்றின் வேகம் குறித்து மீனவா்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை
நாகை மாவட்டத்தில் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 55 கி.மீ வேகத்தை தாண்டியதால் பேரிடா் மேலாண்மை துறையினா் கடலோரக் கிராம மக்களுக்கும், மீனவா்களுக்கும் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகா்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, சென்னை மாவட்டங்களில் தொடா் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் 2 நாள்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக தாழ்வான மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது. வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட செபஸ்தியாா் நகா், பூக்கார தெரு சுனாமி குடியிருப்புகளில் உள்ள சாலைகளில் மழைநீா் தேங்கியதால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மீனவா்கள் கடலுக்குச் செல்ல வில்லை: மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட மீனவக் கிராம கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே பேரிடா் மேலாண்மை துறையினா், கடலோரக் கிராமங்களில் ஒலிப் பெருக்கி மூலம் காற்றின் 55 கி.மீ வேகத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், கிராம மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தினா்.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீனவளத் துறையினா் தடைவித்தித்துள்ளதால், நாகை மாவட்டத்திலுள்ள 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 2-ஆவது நாளாக கடலுக்குள் செல்லவில்லை. மீனவா்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ளனா்.