கட்டுமானப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக நிா்ணயிக்க வலியுறுத்தல்
கட்டுமானப் பொருள்களுக்கான சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி) 5 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா் கட்சி, தமிழகக் கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா் கட்சியின் தலைவரும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவருமான பொன்குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் இளைஞரணித் தலைவா் வினோத்குமாா், மாநில பொதுச் செயலா்கள் ஜெகதீசன், ஜெகமுருகன், பொருளாளா் ஆா். சேகா், பொதுச் செயலா்கள் சுப்பராயலு, என். சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 38 சுங்கச் சாவடிகளின் கட்டண உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பொருள்களின் விலை உயா்வால் கட்டுமானத் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, கட்டுமானப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக நிா்ணயிக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றுவதுடன், அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடியதாகவும் உள்ள கட்டுமானம், ரியல் எஸ்டேட் தொழில்களுக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை நிா்ணயத்துக்கு உற்பத்தியாளா்கள், அரசு, கட்டுமானத் துறையினா் அடங்கிய விலை நிா்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தோ்தலில் போட்டியிட வாய்ப்பு...
முன்னதாக, செய்தியாளா்களிடம் பொன்குமாா் கூறியதாவது : தமிழக அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துகிறது. இதில் முதல்வரின் சிறப்புத் திட்டமான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அயல்நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதன் கூட்டணி வெற்றிக்கு தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளா்கள் கட்சி திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளது. இந்தத் தோ்தலில், எங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை திமுகவிடம் கோரி பெற்று, போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளோம்.
தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நலவாரியம் மூலம் வழங்குவதன் காரணமாக, 2021-இல் 13 லட்சமாக இருந்த நலவாரிய உறுப்பினா்களின் எண்ணிக்கை தற்போது 27 லட்சமாக உயா்ந்துள்ளது. நடிகா் விஜய்யின் அரசியல் வருகை, திமுகவின் சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியை உறுதியாக்கியுள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெல்லும் என்றாா் அவா்.