கட்டெறும்பு காட்டிய காசி விசுவநாதர்
தென்பாண்டி நாட்டில் 15}ஆம் நூற்றாண்டில் விந்தன்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர் அரிகேசரி பராக்கிரம பாண்டியன். வாரணாசிக்குச் சென்று விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார். முருகன் அருளால், அனிமா முதலான அஷ்டமாசித்திகள் வரப்பெற்று நினைத்த மாத்திரத்தில் பறவையைவிட, இலகுவான உடலுடன் பறக்கும் ஆற்றல் பெற்று வான் வழியாக தினமும், வாரணாசிக்கு பறந்து சென்று வழிபாடு செய்தார்.
ஒரு நாள் அரசி தானும், வருவதாக கூறிட, விசுவநாதரை இருவரும் வழிபட்டு திரும்பி வரும்பொழுது, லிங்கத்தையும் கொண்டு வந்தனர். இடையில், அரசி மேற்கொண்டு பயணம் செய்ய இயலாததால் ஒரு சோலையில் இறங்கினர். மீண்டும் புறப்பட ஆயத்தமாகும்போது, லிங்கத்தை வைத்த இடத்திலிருந்து எடுக்க முடியவில்லை. அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து அவ்விடத்துக்கு "சிவகாசி' எனப் பெயரிட்டு திரும்பினர். அதுவே இன்றைய தொழில் நகரமான சிவகாசியாகும்.
ஒரு நாள் திடீரென அரசனின் கனவில் சிவன் தோன்றி, "கோட்டையிலிருந்து கட்டெறும்பு வரிசையாக ஊர்ந்து செல்லும். அந்த வரிசை எங்கு முடிகின்றதோ? அங்கு லிங்கம் உண்டு. அந்த இடத்தில் "கோயில் கட்டு?' எனக் கூறி மறைந்தார்.
மறுநாள் மன்னன் எறும்பின் வரிசையை அடையாளம் கண்டு பின்தொடர்ந்தார். சிற்றாற்றின் கரையில் உள்ள செண்பகத் தோட்டத்தில் சென்று நின்றது. அங்கு லிங்கமும், நந்தியும் இருக்கும் காட்சியைக் கண்டார் அரசர். செண்பகத்தோப்பில் கோயில் கட்ட கருதி தோப்பின் வடக்கு புறமாக ஓடிய சிற்றாற்றை தெற்கு புறமாக ஓடச் செய்தார். ஆற்றின் போக்கையே மாற்றி பராக்கிரமப் பாண்டியன், காசி விசுவநாதருக்கு கோயில் கட்டத் தொடங்கிய செயலை கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.
இவ்வாறு 1445}இல் திருப்பணிகள் தொடங்கி, செண்பகவனத்தில் கோயிலும் கட்டி கோபுரமும் கட்டி தென்காசி நகரையும் நிர்மாணித்து சிறப்பு பெற்றார் பராக்கிரம பாண்டியன்.
1457-இல் 9 நிலை ராஜகோபுரம் தொடங்கப்பட்டு, அவரின் சகோதரர் ஜடிலவர்ம குலசேகர பாண்டியனால் தொடரப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து 136 அடி நீளம், 95அடி அகலம், 178அடி பிரம்மாண்ட உயரத்துடன் 800 சிற்பங்கள், 11கலசங்களுடன் விண்ணுயர நிற்கிறது. இந்தக் கோபுரம் தமிழ்நாட்டின் 6}ஆவது பெரிய கோபுரம்.
கோயில் உள்ளே "காசித் தீர்த்தம்' , "ஈசானத் தீர்த்தம்', "அன்னபூரணித் தீர்த்தம்', "ஆனந்தத் தீர்த்தம்', என புண்ணிய தீர்த்தங்கள் அமைந்திருக்கின்றன. இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் ஏப்ரல் 7}இல் நடைபெறுகிறது.
பொ.ஜெயச்சந்திரன்