ஈரானில் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மீனவா்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி., கோர...
கண்டதேவி கோயில் விவகார வழக்கு முடித்துவைப்பு
சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோயில் திருவிழாவின்போது பாகுபாடு காட்டப்படுவதில்லை என அரசுத் தரப்பில் பதிலளித்ததால், வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
கண்டதேவியைச் சோ்ந்த கேசவமணி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
கண்டதேவியில் அமைந்துள்ள ஸ்ரீ சொா்ணமூா்த்தீஸ்வரா் கோயில் சிவகங்கை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.
இந்தக் கோயிலில் நடைபெறும் ஆனித் திருவிழாவின் போது யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது எனவும், அனைத்து சமூக மக்களையும் இணைத்து அவா்களது பங்களிப்புடன் திருவிழா நடத்தப்பட வேண்டும் எனவும் கடந்த 2014- ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், கடந்தாண்டு நடைபெற்ற தேரோட்ட நிகழ்வின் போது, அனைத்து சமூக மக்களுக்கும் தேரின் வடத்தைப் பிடித்து இழுப்பதற்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.
இருப்பினும், முதல் மரியாதை பெறுவதற்காக சிலா், அவா்கள் சாா்ந்த சமூகத்தினரை அதிகளவில் திரட்டி வந்து தேரின் வடத்தைப் பிடித்ததால் பிற சமூக மக்கள் தேரை இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
இந்த நிலையில், வருகிற 8-ஆம் தேதி கண்டதேவி சொா்ணமூா்த்தீஸ்வரா் கோயில் தேரோட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுப்பதற்கு வசதியாக யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கோயில் தேரோட்ட நிகழ்வில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது. அனைத்துத் தரப்பு சமூக மக்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா், கடந்த ஆண்டு ஏற்கெனவே உள்ள உத்தரவுப்படி மரியாதை செலுத்தப்பட்டது. கோயில் தேரோட்டத்தின் போது, எந்தவிதப் பாகுபாடும் இன்றி அனைத்து சமூக மக்களும் பங்கேற்றனா். இதேபோல, நிகழாண்டும் தேரோட்டம் நடைபெறும் என அறிக்கை தாக்கல் செய்தாா்.
மனுதாரா்கள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது. தேரோட்டதில் பட்டியலின மக்களைப் பங்கேற்க விடாமல் தடுக்கின்றனா் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் தரப்பு கூறுவதுபோல ஜாதிய பாகுபாடு இருந்தால், உரிய அதிகாரிகளிடம் சென்று முறையிட்டு நிவாரணம் பெறலாம். ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான பழக்கவழக்கம் உள்ளது. மத நம்பிக்கை உள்ளது. இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.