விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிமன்றம் கண்டனம்!
பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பெண் சிறப்பு உதவி ஆய்வாளரே நடவடிக்கை எடுக்க வில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை வேதனை தெரிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி தாக்கல் செய்த மனு:
கடந்த மே மாதம் எனது 17 வயது மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். எனது மகளின் தற்கொலைக்கு எங்கள் வீட்டின் அருகே வசித்து வரும் தாவூத் இப்ராஹிம் பாலியல் தொல்லை அளித்தது தான் காரணம் எனத் தெரியவந்தது. இதுதொடா்பான புகாரில் கேணிக்கரை போலீஸாா், தாவூத் இப்ராஹிம் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனா். எனவே தாவூத் இப்ராஹிம் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எனது மகளின் உடலைப் பெற மாட்டேன் எனக் கூறினேன். அப்போது, தாவூத் இப்ராஹிம், எனது மகளோடு தகாத உறவில் இருந்த விடியோக்களை வெளியிட்டு விடுவதாக கேணிக்கரை காவல் ஆய்வாளா் மிரட்டினாா்.
இதனால் வேறுவழியின்றி மகளின் உடலைப் பெற்று இறுதிச் சடங்கு செய்தோம். இந்த நிலையில், கடந்த ஜூன் 5-ஆம் தேதி தாவூத் இப்ராஹிமின் தந்தை, தாய், பாட்டி எனது வீட்டுக்கு வந்து வீட்டை காலி செய்யுமாறு மிரட்டினா். அதன் பிறகு, புகாா் அளித்தும், கேணிக்கரை காவல் ஆய்வாளா் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டு வருகிறாா். ஆகவே, எனது மகளின் மரண வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கேணிக்கரை காவல் ஆய்வாளா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: உங்களின் விசாரணை அறிக்கை நீங்கள் இந்தப் பணிக்கு தகுதியற்றவா் என்பதையும், உங்களின் திறமையின்மையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
வழக்கு விசாரணையில் தொடா்புடைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஒரு பெண். அவா் பெண்ணாக இருந்தும், மற்றொரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது வேதனையளிக்கிறது. இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். வழக்கு விசாரணை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.