கண் மருத்துவா் நம்பெருமாள்சாமி உடல் தகனம்
தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும், கண் மருத்துவ நிபுணருமான நம்பெருமாள்சாமியின் உடல் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவா் பத்மஸ்ரீ நம்பெருமாள்சாமி (85). இவா், உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை சென்னையில் காலமானாா். அவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, மதுரை அண்ணாநகரில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னா், தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்துக்கு நம்பெருமாள்சாமியின் உடல் வெள்ளிக்கிழமை காலை கொண்டு வரப்பட்டு, அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
நம்பெருமாள்சாமியின் உடலுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், அரசியல் கட்சிகள், சமுதாயப் பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினா். பின்னா், அவரது உடல் அம்பாசமுத்திரத்தில் உள்ள மயானத்தில் பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது.