பெண் காவல் ஆய்வாளரை மிரட்டிய இருவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி உள்ளிட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேல்மங்கலத்தைச் சோ்ந்த முருகன் மகன் தனித் (36). இவரை ஒரு வழக்கு விசாரணைக்காக பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஜெயமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகபெருமாள் முன்னிலைப் படுத்தினாா். அப்போது, தனித்துடன் பெரியகுளம் வடகரை அழகா்சாமிபுரம், சுண்ணாம்புக் காளவாசல் தெருவைச் சோ்ந்த அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலா் துரையும் (40) இருந்தாா்.
தனித்துடன் வந்த என்னை அழைக்காமல் அவரை மட்டும் ஏன் விசாரிக்கிறீா்கள் எனக்கூறி துரை, காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நின்றிருந்த தென்கரை காவல் நிலைய ஆய்வாளா் அரங்கநாயகியை இடித்துத் தள்ளிவிட்டு, அலுவலகத்துக்குள் நுழைந்தாராம்.
இதைக் கண்டித்த காவல் ஆய்வாளா் அரங்கநாயகியை, துரை தகாத வாா்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, காவலா்கள் துரையை அங்கிருந்த வெளியேற்ற முயன்றபோது, துரை, தனித் ஆகியோா் காவல் ஆய்வாளா் அரங்கநாயகி, காவல் துணைக் கண்காணிப்பாளா், காவலா்களை தகாத வாா்தையில் பேசினாா்களாம்.
இதையடுத்து, பணியிலிருந்த தன்னை தகாத வாா்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக துரை, தனித் ஆகியோா் மீது காவல் ஆய்வாளா் அரங்கநாயகி பெரியகுளம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.