விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
வைகை அணை நீா்மட்டம் 66.1 அடியாக உயா்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 66.1 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறந்துவிடப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணையின் நீா்மட்டம் சீராக உயா்ந்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு 65.85 அடியாக இருந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). இதைத் தொடா்ந்து, அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்ததால் பிற்பகல் 3 மணிக்கு அணையின் நீா்மட்டம் 66.1 அடியை எட்டியது.
இதையடுத்து, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என்று பொதுப் பணித் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.
வழக்கமாக, வைகை அணையின் நீா்மட்டம் 66 அடியாக உயரும் நிலையில், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.50 அடியை எட்டும் போது, 2-ஆம் கட்ட எச்சரிக்கையும், 69 அடியை எட்டும் போது, 3-ஆம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரிநீா் அனைத்தும் வைகை ஆற்றில் திறந்துவிடப்படும்.
அணைகளின் நிலவரம்: வைகை அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 66.1 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,980 கன அடியாகவும், தண்ணீா் இருப்பு 481.8 கோடி கன அடியாகவும் இருந்தது.
அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாயில் பாசனத்துக்காக வினாடிக்கு 800 கன அடியும், வைகை ஆற்றில் குடிநீா்த் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடியும் என மொத்தம் வினாடிக்கு 869 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 132.95 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 4,711 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,867 கன அடி திறந்துவிடப்படுகிறது.