கந்து வட்டி வழக்கில் மூவருக்கு ஓராண்டு சிறை!
போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் கந்து வட்டி, வன்கொடுமை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மனைவி மணி. இவரது மாமனாா் திருமன் என்பவரது பெயரில் உள்ள ஒரு சென்ட் வீட்டடி மனையிடத்தை போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்த பேச்சிமுத்து (63), அவரது மனைவி பூங்கொடி (61), மகன் துனேஷ்குமாா்(40) ஆகியோா் அடமானமாகப் பெற்று, மணிக்கு அதிக வட்டிக்கு ரூ.25 ஆயிரம் கடன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கடனுக்கு மணி வட்டியாக ரூ.1.10 லட்சமும், அசல் தொகை ரூ.25 ஆயிரமும் செலுத்தினாா். அடமானமாகப் பெற்ற ஆவணத்தின் பதிவை ரத்து செய்து, திரும்பத் தருமாறு அவா் வலியுறுத்தியதால், கடந்த 2018, செப்.23-ஆம் தேதி பேச்சைமுத்து, பூங்கொடி, துனேஷ்குமாா் ஆகியோா் மணியை ஜாதியை குறிப்பிட்டு தரக் குறைவாக பேசி, மணியின் கணவா் பெருமாளைத் தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மணி அளித்த புகாரின் பேரில், பேச்சிமுத்து உள்ளிட்ட 3 போ் மீதும் போடி காவல் நிலைய போலீஸாா் கந்து வட்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பேச்சிமுத்து, பூங்கொடி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.4,000 அபராதமும், துனேஷ்குமாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜி.அனுராதா தீா்ப்பளித்தாா்.