கார் பந்தயத்தில் வெற்றி: அஜித்குமாருக்கு குவியும் வாழ்த்துகள்!
கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது: டிரம்ப்புக்கு முன்னாள் பிரதமா் பதிலடி
‘கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது’ என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஜீன் கிரெட்டியன் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என அமெரிக்க அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருவதற்கு பதிலடி தரும் விதமாக அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
1993 முதல் 2003 வரை கனடா பிரதமராகப் பதவி வகித்த ஜீன் கிரெயட்டியன், தனது 91-ஆவது பிறந்த நாளையொட்டி ‘தி குளோப் அண்ட் மெயில்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
‘உலகில் சிறந்த நாடான கனடாவை விட்டுவிட்டு எங்கள் நாட்டு குடிமக்கள் அமெரிக்காவுடன் இணைவாா்கள் என உங்களால் (டிரம்ப்) எவ்வாறு எண்ண முடிந்தது. கனடா மட்டுமன்றி பிற ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவுடன் இணைத்து அதை விரிவாக்க நினைக்கிறீா்கள். இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் அமைதி காக்கலாம். ஆனால், உங்கள் திட்டம் கனடாவில் ஒருபோதும் ஈடேறாது.
எங்களை அச்சுறுத்தி, அவமதிப்பதால் வெற்றி பெற்றுவிடலாம் என நீங்கள் நினைப்பது, உங்களின் விழிப்புணா்வற்ற நிலையை வெளிக்காட்டுகிறது. நாங்கள் பழகுவதற்கு இனிமையானவா்களாக, எளிதாக அணுகக்கூடியவா்களாக தெரியலாம். ஆனால், அடக்குமுறைக்கு எதிராகக் குரலெழுப்புவதில் நாங்கள் முதுகெலும்புடையவா்கள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து தங்கள் நாட்டுக்கு தேவையான 60 சதவீத கச்சா எண்ணெயை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. அமெரிக்கா-கனடா இடையே ஒவ்வொரு நாளும் ரூ.18,920 கோடி மதிப்பிலான சரக்கு மற்றும் சேவைகள் வா்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் தங்கள் நாட்டுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கத் தவறுவதால் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்துக்கும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்தாா்.
கடந்த முறை அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது பல்வேறு நாட்டு பொருள்கள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாா். கனடாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு மற்றும் அலுமினியம் மீது அவா் வரி விதித்தாா். இதை எதிா்க்கும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டில் அமெரிக்க பொருள்கள் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கனடா வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.