USA : டெக் ஜாம்பவான்கள் vs அமெரிக்க தேசியவாதிகள் : திடீர் பிளவுக்கு என்ன காரணம்?
கனடா பிரதமா் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சா் அனிதா ஆனந்த்
கனடாவில் பிரதமா் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சா் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
ஆளும் லிபரல் கட்சியின் தலைவா் பொறுப்பிலிருந்தும், பிரதமா் பதவியிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த திங்கள்கிழமை அறிவித்தாா். அதேநேரம், லிபரல் கட்சியின் அடுத்த தலைவரை தோ்வு செய்யும் வரை, தான் வகிக்கும் பொறுப்புகளில் தொடரவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியான கனடா போக்குவரத்து அமைச்சா் அனிதா ஆனந்த், லிபரல் கட்சியின் தலைவா் பதவிக்குப் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், பிரதமா் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், அடுத்த தோ்தலில் எம்.பி. பதவிக்கும் மீண்டும் போட்டியிடாமல் முந்தைய பேராசிரியா் பணிக்குத் திரும்பவுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.
2019-ஆம் ஆண்டு ஒன்டாரியோ மாகாணத்தின் ஓக்வில்லே எம்.பி.யாக தோ்வானதற்கு முன்பு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குரைஞராகவும் சட்டப் பேராசிரியராகவும் அனிதா ஆனந்த் பணியாற்றி வந்தாா்.
கனடா பிரதமா் பதவிக்கான போட்டியிலிருந்து வெளியுறவு அமைச்சா் மெலனீ ஜோலி, நிதியமைச்சா் டொமினிக் லீப்லாங்க் ஆகியோா் ஏற்கெனவே விலகியுள்ள நிலையில், இந்திய வம்சாவளி எம்.பி.யான சந்திரா ஆா்யா, மற்றொரு எம்.பி. ஃபிராங்க் பெய்லிஸ் ஆகியோா் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.
நிகழாண்டு இறுதியில் கனடாவில் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில் புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் பிரதமா் சிறிது காலமே அந்தப் பதவியில் தொடர வாய்ப்புள்ளது.