சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!
கனமழை: அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு
கனமழை காரணமாக தமிழகத்தில் 21 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும்.
இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், டிச.12-ஆம் தேதி சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், டெல்டா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில், டிச.12- ஆம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னையில், புதன்கிழமை காலை முதல் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் வியாழக்கிழமை (டிச.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்று கனமழை காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்தூக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம், கரூர், நாகப்பட்டினம், நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று திருவண்ணமாலை, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு
தொடர் கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து
பள்ளிகளில் வியாழக்கிழமை நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.
6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு வியாழக்கிழமை(டிச.12) நடக்கவிருந்த ஆங்கிலத் தாள் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடத்துவதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் அரையாண்டுத் தோ்வுகள் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் டிச.24 முதல் ஜன.1 வரை அளிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறை இந்த மூன்று மாவட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்கலை தேர்வு ஒத்திவைப்பு
இதேபோன்று, கனமழை காரணமாரக வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவதற்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.