தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!
கனிமவளக் கொள்ளை; களமாடிய சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக் கொலை - `அரசுக்கு எச்சரிக்கை’ - அண்ணாமலை
கனிம வளக் கொள்ளைக்கு எதிராக...
புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கரீம் மகன் ஜகபர் அலி. முன்னாள் ஒன்றிய அதிமுக கவுன்சிலரான இவர், சமூக ஆர்வலரும் கூட. திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதாரங்களுடன் பலமுறை மனு கொடுத்து, அதற்கு எதிராக களத்தில் நின்றவர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல், மண், மலை உள்ளிட்ட கனிமவளங்கள் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுகிறது என்றக் குற்றச்சாட்டை தொடர்ந்து எழுப்பிவந்தார். இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி, புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் சிலக் குவாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் பலநூறுக் கோடிக்கான கனிமவளக் கொள்ளை நடந்திருக்கிறது எனக் குறிப்பிட்டு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் கடந்த 17-ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜகபர் அலி, லாரி மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் அலி இறந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் தன் எக்ஸ் பக்கத்தில், ``புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் புகாரளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ் நாட்டில் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முற்படும் காவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்." எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான திரு. ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் ஜெகபர் அலி அவர்கள். இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர். கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு, தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
`திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன?’
அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன? கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு.ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு.
உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்." எனக் குறிப்பிட்டி, ஜகபர் அலிப் பேசிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs