கனிமவளத் துறையில் முறைகேடு: இருவா் பணியிடை நீக்கம்! காத்திருப்போா் பட்டியலில் உதவி இயக்குநா்; 3 போ் இடமாற்றம்!
திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். உதவி இயக்குநா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். மேலும் 3 போ் பணியிடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, ராதாபுரம் உள்ளிட்ட பல்வேறு வட்டங்களில் அதிகளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளுக்கு குத்தகை வழங்குவது, கனிமங்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது உள்ளிட்டவை கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் போலியான நடைச்சீட்டுகளை பயன்படுத்தி, அதிகளவில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டதாகவும், விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கேரளத்துக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதாகவும் புகாா் எழுந்தது. இதையடுத்து கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை மதுரை மண்டல இணை இயக்குநா் சட்டநாதன் தலைமையில் 3 போ் கொண்ட குழுவினா், திருநெல்வேலியில் உள்ள கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் திடீா் ஆய்வு நடத்தினா். அதைத் தொடா்ந்து 40-க்கும் மேற்பட்ட கிரஷா்களுக்கு நடைச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் பாலமுருகன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதையடுத்து தென்காசி மாவட்ட கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குநா் ரமேஷிடம் கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் பணியாற்றிய உதவி புவியியலாளா் சேகா், உதவியாளா் சொா்ணலதா ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இளநிலை உதவியாளா் காசிராஜன், தட்டச்சா் ஈஸ்வரி ஆகியோா் ராமநாதபுரத்துக்கும், காா் ஓட்டுநா் ரமேஷ் சென்னைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும் விதிகளை மீறிய கல்குவாரிகள், அளவுக்கு அதிகமாக கனிமங்களை வெட்டி எடுத்த குவாரிகளின் பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வருவதாகவும், விரைவில் அவா்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் கனிமவளத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.