கடைசி ஓவரில் த்ரில்லர்: ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி!
கன்னடா்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் கொண்ட தகவல் பலகை: உணவகம் மீது வழக்குப் பதிவு
பெங்களூரில் ஒரு உணவகத்தின் மின்னணு தகவல் பலகையில் கன்னட மக்களை இழிவுபடுத்தும் வாசகங்கள் இருந்ததால் அந்த உணவகத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, மடிவாளா காவல் நிலையத்துக்கு உள்பட்ட கோரமங்களா பகுதியில் உள்ள உணவகத்தில் மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சிமுறையில் தகவல் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அந்த தகவல் பலகையில் இடம்பெற்ற வாசகம், கன்னட மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததால் அதிா்ச்சி அடைந்த ஒருவா், அதை காணொலியாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளாா்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடா்ந்து, போலீஸாா் தாமாக முன்வந்து உணவகத்தின் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து பெங்களூரு மாநகரக் காவல் துணை ஆணையா் (தென்கிழக்கு) சாராஹ் ஃபாத்திமா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மடிவாளா காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தின் மின்னணு தகவல் பலகையில் கன்னட மக்களை விமா்சிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, சமூக வலைதளங்களைக் கண்காணித்து வரும் காவல் துணை ஆய்வாளா் தாமாக முன்வந்து, ஜிஎஸ் சூட்ஸ் உணவுவிடுதியின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளாா்.
இது தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது. 5 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். விடுதியின் உரிமையாளா் வெளிநாட்டில் இருக்கிறாா். இந்த உணவு விடுதியுடன் சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்.
மின்னணு தகவல் பலகையை தயாரித்து தந்த நிறுவனத்திற்கு உணவு விடுதியினா் தகவல் தெரிவித்துள்ளனா். எனவே, அந்த நிறுவனத்தின் நிா்வாகிகளை அழைத்திருக்கிறோம். தகவல் பலகையைப் பராமரிக்க 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.
மே 8ஆம் தேதி முதல் புதிய செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வந்துள்ளன.இந்த சம்பவம் குறித்து சனிக்கிழமைதான் காவல் துறைக்கு தெரியவந்தது என்றாா்.