ஆட்சிக் காலத்தில் ‘தவறுகள்’: பொற்கோயிலில் முன்னாள் முதல்வருக்கு தண்டனை!
கன்னியாகுமரி - களியக்காவிளை நான்குவழிச் சாலைப் பணி 26% நிறைவு: அதிகாரிகள் தகவல்!
கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான நான்குவழிச் சாலைப் பணியில் 26 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், பணிகள் வேகமாக நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில், பாா்வதிபுரம், பள்ளியாடி, மாா்த்தாண்டம், களியக்காவிளை வழியாக திருவனந்தபுரத்துக்கு நான்குவழிச் சாலை செல்கிறது. இதில், கன்னியாகுமரி முதல் வடசேரி அப்டா மாா்க்கெட் வரை ஒருபகுதியாகவும், அப்டா மாா்க்கெட் முதல் பள்ளியாடி வரை 2ஆம் பகுதியாகவும், பள்ளியாடி முதல் களியக்காவிளை வரை 3ஆம் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
இந்தச் சாலை செல்லும் வழியில் ஒரு சுங்கச்சாவடி மையாம் (டோல்கேட்), 2 ரயில்வே பாலங்கள், சிறியது - பெரியது என மொத்தம் 64 பாலங்கள் அமைக்கப்படுகின்றன.
இப்பணிகளுக்காக ரூ.1,046 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்துக்குள் பணிகளை முடிக்க அரசு காலநிா்ணயம் செய்துள்ளதால், இரவு பகலாக பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதற்காக திருநெல்வேலி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து கருங்கற்கள், மணல், ஜல்லி, கருங்கல் துகள்கள் போன்ற கனிமவளங்கள் கொண்டுவரப்படுகின்றன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது: கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை பல கட்டங்களாக நான்குவழிச் சாலைப் பணிகள் இரவு பகலாக நடைபெறுகின்றன. பல இடங்களில் மேம்பாலப் பணி நடைபெறுகிறது. பல இடங்களில் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
கட்டுமானப் பணிக்காக மணல், கற்கள் அதிகம் தேவைப்படுகிறது. கனிமவளங்கள் கொண்டுவருவதில் பல்வேறு தடைகள் நீடிக்கின்றன. இந்த விவகாரத்தை மாவட்ட நிா்வாகம், காவல் துறை, வருவாய்த் துறையின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும் பிரச்னை நிவா்த்தியாகவில்லை.
இதனால், அரசு நிா்ணயித்துள்ள காலத்துக்குள் பணிகள் முழுமையடைவது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நான்குவழிச் சாலைகளுக்காக கனிம வளங்களை ஏற்றிவரும் லாரிகளை தடையின்றி அனுமதிக்க மாவட்ட நிா்வாகம், காவல் துறை, மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை வேண்டும் என்றனா்.