`கமிஷன் தொகை எங்க?'- வாக்குவாதம் செய்த திமுக கவுன்சிலர்; வைரல் வீடியோவால் பரபரப்பு
தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக 9 கவுன்சிலர்கள் உள்ளனர். இங்கு ஒன்றியக்குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா பணியாற்றி வருகிறார். தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 9 கவுன்சிலர்களில் 8 நபர்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். ஒருவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட 3வார்டு ஒன்றிய கவுன்சிலரும், தி.மு.க கிழக்கு ஒன்றியச் செயலாளருமான அழகுசுந்தரம் என்பவர், தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் செய்யப்பட்ட பணிகளுக்கு தனக்கு வரவேண்டிய கமிஷன் தொகை எங்கே எனக்கேட்டு தலைவருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ தென்காசி மாவட்டத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகளுக்கான டெண்டர் தொகையில் இருந்து குறிப்பிட்ட அளவு வார்டு கவுன்சிலர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது.
அந்தவகையில் ஒன்றிய கவுன்சிலர் அழகுசுந்தரம், தனக்குரிய கமிஷன் தொகை 7 லட்சம் ரூபாய் கேட்டு ஒன்றிய குழுத்தலைவர் ஷேக் அப்துல்லாவிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோதான் தான் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசையில் அரசுக்குச் சொந்தமான சமுதாய நலக்கூடக் கட்டிடம் மற்றும் நூலகக் கட்டிடங்களை இடித்து அதில் இருந்த இரும்பு சாமான்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஒன்றியக்குழு அலுவலகத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர்கள் கமிஷன் தொகைக்காக கடுமையாக வாக்குவாதம் செய்வதை சொந்தக்கட்சியை சேர்ந்தவர்களே மறைமுகமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருவது, ஒன்றியக்குழு அலுவலகத்தில் மட்டுமல்ல, உள் கட்சிக்குள்ளும் பரபரப்பு தீயைப் பற்ற வைத்துள்ளது" என்றனர்.