கமுதி காவல் நிலையம் முன் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு
கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையம் முன் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் காவலா்கள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.
இந்தக் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலா் குடியிருப்பு, அருகில் உள்ள தெருக்கள், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் காவல் நிலையம் முன் உள்ள கழிவுநீா் கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. பல மாதங்களாக கால்வாய் தூா்வாரப்படாததால் துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் உற்பத்தியும் பெருகி விட்டது.
இதனால் காவலா்கள், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள், அந்த வழியாக சாலையை கடந்து செல்வோா் அவதி அடைந்து வருகின்றனா். இதுகுறித்து கமுதி பேரூராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே, இதில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, காவல் நிலையம் முன் உள்ள கழிவு நீா் கால்வாயை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.