கருங்கல் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கருங்கல் பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கருங்கல் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு ரூ. 5.22 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதனால் பாலூா், தக்கலை சாலைக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிற நகரங்களிலிருந்து நாகா்கோவில், குறும்பனை, திங்கள்சந்தை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கருங்கல் பேருந்து நிலையம் வழியாக வந்து செல்லும் பேருந்துகள், கருங்கல் மீன் சந்தை அருகில் தற்காலிக நிழற்கூடத்திலிருந்து புறப்படும். மறுமாா்க்கமாக செல்லும் பேருந்துகள் காா் நிலையம் அருகே நின்று செல்லும்.
இதனால், அதிக நெரிசல் ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் மிகவும் சிரமப்படுகின்றனா். பணிகள் மந்தமாக நடைபெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.