selena gomez: காதலரைக் கரம்பிடித்த செலினா கோம்ஸ் - வைரலாகும் திருமணப் புகைப்படங்...
கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்
கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"கரூரில் நடந்த துயர நிகழ்வில் 40 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 14 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது.
பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. அவர்கள் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள்.
காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைவார்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில்,
"கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதுவே என்னுடைய கருத்து.
ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.
எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன். அது யோசனைதான். இது போன்று பலர் ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்திருப்பார்கள்.
எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் பொது வெளி நிகழ்ச்சிகள் நடத்துபவர்களும் கீழ்ப்படிந்து நடந்துகொள்ள வேண்டும். கரூர் நிகழ்வைப் போன்று துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
P. Chidambaram comments on Karur stampede death
இதையும் படிக்க | வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?