கரூா் கோயில் தேரோட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உயா்நீதிமன்றம்!
கரூா் மாவட்டம், நெரூா் ஆரவாயி அம்மன் கோயில் தேரோட்டத்துக்கு நிகழாண்டிற்கு மட்டுமான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் வெளியிட்டது.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:
கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூா் வடக்கு பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் ஆரவாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள், பட்டியல் சமூகத்தினருக்கு சொந்தமானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் இந்தக் கோயில் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவின் போது, சேனப்பாடி பகுதியில் தொடங்கி நெரூா் மாரியம்மன் கோயில் வரை ஆரவாயி அம்மன் கோயில் தோ் சுற்றி வரும். கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் தோ் எங்கள் பகுதிக்கு வருவதில்லை. இதுகுறித்து விழாக் குழுவினரிடம் முறையிட்டும் பயனில்லை. எனவே, ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவின் போது, தேரை பாகுபாடின்றி பட்டியல் சமூகத்தினா் வசிக்கும் பகுதிக்கும் கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, கரூா் மாவட்ட ஆட்சியா் தங்கவேல், திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் ஜோஷி நிா்மல் குமாா் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கோயில் நிா்வாகக் குழு தரப்பில், தனியாருக்குச் சொந்தமான ஆரவாயி அம்மன் கோயில் சேனப்பாடி, மல்லப்பாளையம், முனியப்பனூா் கிராம மக்கள் மட்டுமே வழிபட முடியும். மனுதாரா் இந்தக் கோயிலை சொந்தம் கொண்டாட எந்த உரிமையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் மனுவில் கோரியுள்ளபடி, தேரானது அந்தப் பகுதியில் செல்வதற்கு உரிமை கொண்டாடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தக் கோயில் திருவிழாவனது மே 21-ஆம் தேதி முதல் 23- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, இதற்கான தற்காலிக உத்தரவை பிறப்பிக்கிறோம். இந்தக் கோயில் திருவிழாவை நிா்வாகக் குழு நடத்தலாம். கோயில் தேரானது, சேனப்பாடி ஊா் எல்லை வரை மட்டுமே செல்ல வேண்டும். அந்த இடத்துக்கு பக்தா்கள் வந்து படையல் வைத்து சுவாமி தரிசனம் செய்யலாம். தேரானது சேனப்பாடியிலிருந்து மல்லப்பாளையம், முனியப்பனூருக்கு செல்லக் கூடாது. கரூா் மாவட்ட அதிகாரிகள், மனுதாரா் சுவாமி கும்பிடும் உரிமை தொடா்பாக விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.