ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணி...
கற்பனையிலேயே சோமபான வாசனையை முகர்ந்த அதிசயம்! - பறம்பின் பெருங்காவியம் | #என்னுள்வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அறுக நாட்டு சிற்றரசன் செம்பனின் அரண்மனையில் இருந்து பாரியின் குலப்பாடல் வரை புலவர் கபிலரோடு சேர்ந்து பறம்பு நாட்டிற்கு சென்று பறம்பு மக்களோடு வாழ்ந்து பண்டைய தமிழரின் வாழ்க்கை முறையையும் ஆதிகால மனிதர்களின் நாகரிகத்தையும் வார்த்தைகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் அவர்கள் கொடுத்த மரியாதையும் அதை காப்பாற்ற அவர்கள் செய்த உயிர் தியாகமும் இப்படி சில காலம் பறம்பு நாட்டில் வாழ்ந்து விட்டு அந்த அனுபவத்தை ஓரிரு வரிகளில் சொல்வதென்றால் முடிகிற காரியமா...
பாரியை எனக்குத் தெரியும் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்று ஆனால் யார் இந்த வேள்பாரி? கருணை மட்டுமே பாரி அல்ல அவனுள் அடங்கிக் கிடக்கும் காதல் கோபம் வீரம் பண்பாடு.. பாரியின் குலம் அவன் மூதாதையர்கள் கொற்றவையின் குறி சொல்லும் குழந்தைகளான தெய்வ வாக்கு விலங்குகள் எல்லையை விட்டு வெளியேறக் கூடாது என்று அவன் ஒரு சூரை காற்றாய் மாறிய தருணம். ஆனால் அன்பினால் மதங்கனுக்காக குலப்பொருளான கொள்ளிக்காட்டு விதையையே கொடுத்த அவன் மனப்பான்மை.

மிகவும் அரிதான அதிசயமான சோம பானத்தை பானர்களுக்கு அள்ளிக் கொடுத்தவன் தன்னை நாடி தஞ்சம் புகுந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தவன் கொற்றவை கூத்தின் போது என் மண்ணை நம்பி வந்த குல மக்களின் கண்ணீர் துடைக்க நான் உயிரையும் கொடுப்பேன் என்று சூளுரைத்தவன். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற தத்துவத்திற்கு ஏற்ப கருணை உள்ளம் கொண்ட பாரியின் மற்றொரு பக்க வீரத்தையும் கண்முன்னே காட்டி இவன்தான் வேள்பாரி என்று சொன்னார் ஆசிரியர் சு.வெங்கடேசன்....
ஒரு எழுத்தாளன் தன் எழுத்துக்குள் வாசகர்களை ஈர்க்கும் திறமை என்னவென்று எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டினார் - இரண்டாவது அத்தியாயத்தை படிக்க வேண்டும் என்ற ஆவலை முதல் அத்தியாயத்தின் முடிவில் கொடுத்தார்... கடலை விட எங்கள் பாரின் கருணை பெரியது என்று நீலன் சொல்லும் போது அடுத்த அத்தியாயத்தை படிக்க வேண்டும் ஆவல் இல்லாதவர் யாரும் இருக்க முடியாது அப்படி இரண்டாவது அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்து விட்டால் அவ்வளவுதான் வேள்பாரியை முடித்து மூடி வைக்கும் வரை வேறு எந்த வேலைகளிளும் கவனம் செலுத்த முடியாது இதை அந்த பொழுதோடு நான் அனுபவித்த தருணம் வாழ்வில் இன்னொரு முறை கிடைக்குமா என்று தெரியாது...
போர் நடந்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் என் மனம் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்... நீலனை கொன்று விடுவார்களோ, உதிரன் இறந்து போவானோ, ஈங்கையன் இப்படி மாறிப் போனானே, ஒருவேளை பாரியை கொன்று விடுவார்களோ முடிவு என்ன முடிவு என்ன இப்படித்தான் கதை முடியும் வரை ஆனால் குலப்பாடலோடு கதை முடிந்தது தான் வாழ்வின் மிகப்பெரிய ஏமாற்றம்...

ஆசான் தேக்கனும் கருங்கைவானனும் ஒருவரை ஒருவர் வெட்டி சரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கும் போது ஏற்பட்ட படபடப்பு- அந்த வினாடி என் கையில் ஒரு வாள் இருந்தால் நானே கருங்கைவானனை வெட்டிப் போட்டுருப்பேன் என்று நினைத்தவர்கள் எத்தனை பேரோ அவர்களின் நானும் ஒருவன்...
சோமபானம் பற்றிய நிகழ்வு வரும் போதெல்லாம் கற்பனையிலேயே அந்த வாசனையை முகர்ந்த ஒரு அதிசயம்... முன்னோர்கள் உருவாக்கி வைத்த நாகபச்சை வேலி அதை பாதுகாத்து வரும் தலைமுறை கடந்த குல நாகினிகள்.... எத்தனை காதல்
முருகன்-வள்ளி
எவ்வி-சோமக்கிழவி
பாரி-ஆதினி
நீலன்-மயிலா
உதிரன்-அங்கவை இதுவெல்லாம் கை சேர்ந்த காதல் ஆனால் உடைந்து போன காதல்....
பொற்சுவை....... பொற்சுவையின் மரணம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று
என் மனக்கேதம் என்னவென்றால் ஒருமுறையாவது பொற்சுவை பாரியை பார்த்திருக்கலாம் இவன்தான் பாரி என்று தெரிந்த பிறகாவது உயிர் விட்டு இருக்கலாம் ஆனால் ஆசிரியர் கல்நெஞ்சக்காரர் அதற்கு கூட இடம் கொடுக்கவில்லை...
திசைவேழரின் வருகையின் போது அவர் மாணவர்களுள் ஒருவனாய் இருந்து பயந்த தருணம்... அவர் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை கேட்பது போலவே இருந்தது... தெய்வ வாக்கு விலங்கிற்காக திசைவேழர் கபிலரிடம் வந்து பேசியபோது இவரெல்லாம் ஒரு பெரிய மனிதனா என்று தோன்றியது ஆனால் விதியை மீறிய படைக்கு நிலைமான் கோல் சொல்லியாக இருந்ததை நினைத்து வேதனைப்பட்டு தன் உயிரையே விட்டபோது அறத்திற்காக உயிர்விட்ட நீதிமான் என்று மனதில் உருவெடுத்தார்...
எதார்த்தமான ஒரு இரவில் சூளுரை சேர்ந்த ஒரு சிறுவனை அறிமுகப்படுத்தி போரின் இறுதி நாட்களில் அவனே போரை வழிநடத்திச் செல்லும் ஒரு மாவீரனாக்கி எதிரிகளால் உள்ளே நுழையவே முடியாது என்கிற சூழ்நிலையை மாற்றி மூஞ்சலை நொறுக்கி தகர்த்தெறிந்து விட்டு உள்ளே நுழைந்து நீலனின் கரம் பிடித்தவன்.... அவனையும் ஆசிரியர் விட்டு வைக்கவில்லை ஒரு மனிதன் எத்தனை பேரைத்தான் சாகடிப்பது, அதனால்தான் இன்று வாசகர்களின் மனச்சிறையில் இருக்கிறார் ஆசிரியர் சு. வெங்கடேசன்...
இரவாதனை உணர்ந்த வரையில் அவன் தளபதி முடியனின் மகன் என்பதை விட நீலனுக்காக உயிர் விட்ட மாவீரன் என்றே அவனை பலரும் கருதுவர்.
இந்த காட்டின் தலைமகனை இழந்துவிட்டோமடா பாரி என்று ஆசான் காலை பிடித்து கதறிய போது நொறுங்கியது பாரியின் உள்ள மட்டுமல்ல...
ஆசான் தேக்கனின் மரணத்தை கூவல் குடி வீரன் ஓடிக்கொண்டே தாவரங்களுக்கும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் மண்ணுக்குள் வாழும் ஜீவராசிகளுக்கும் சொல்லிக் கொண்டே ஓடும்போது கூவல் குடியினரின் கதறல் ஓசை மலை எங்கும் எதிரொலித்த போது கண்கள் நீர் வற்றாத குளமாயின...
ஆரம்ப நிலையிலே ஒரு பொருளையோ அல்லது ஒரு ஜீவராசியையோ அறிமுகப்படுத்தி அதன் பலன் மற்றும் விளைவுகளை விளக்கிச் சொல்லி கதையின் தேவையான இடங்களில் அவற்றை பயன்படுத்திய ஆசிரியரின் நுணுக்கம் அட்டகாசம் (கொள்ளிக்கட்டு விதை, பால்கொறண்டி, திகைப்பூச்சி)...
நமது படையின் எண்ணிக்கை குறைவாகினும் அரிமான்களும் திரையர்களும் களமிறங்க கூடாது அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு அவர்களும் அழிந்துவிட்டால் அந்த குலமே அழிந்துவிடும் என்று எண்ணிய பாரியின் மனப்பக்குவத்தை என்னவென்று சொல்ல...
ஒரு லட்சத்து நாற்பதாயிரம் எதிரிகள் பங்கெடுத்த ஒரு போரில் ஒரு லட்சத்து முப்பதெட்டாயிரம் பேர் வரை கொன்று குவித்து மீதம் இருந்தவர்களையும் தேறித்து ஓட விட்டான் வேள்பாரி.....
இந்தப் புதினத்தில் என் உள்ளம் கவர்ந்த கதாபாத்திரம் என்று தனித்து எதுவும் இல்லை, ஏனென்றால் நான் வாசிக்கவில்லை வேள்பாரியோடு வாழ்ந்திருக்கிறேன் நான் மட்டுமில்லை வேள்பாரியை கையில் எடுத்த எல்லோரும் தான் என்னுடைய இந்த பதிவை பரிசீலனை பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களும் தான்...
காராளி வடித்த காமன் விளக்கின் அற்புதத்தை பாராட்ட பொற்சுவை மட்டுமே இருந்தால் - ஆசிரியர் சு.வெங்கடேசன் வடித்த இந்த பிரம்மாண்டத்தை பாராட்ட கோடான கோடி பறம்பு மக்கள் இருக்கிறார்கள்..... அவர்களில் நானும் ஒருவன்.
வாழ்க தமிழ்
வளர்க வேள்பாரியின் புகழ்
பாரத்
மதுரை.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!