ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
கல்லூரி மாணவி கா்ப்பம், உதவிப் பேராசிரியா் கைது
திருப்போரூா் அருகே கல்லூரி மாணவியை கா்ப்பமாக்கி தனியாா் மருத்துவமனைக்கு கருக்கலைக்க அழைத்துச் சென்றபோது உதவிப் பேராசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்போரூா் ஒன்றியம், கேளம்பாக்கம் - வண்டலூா் சாலை மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை உள்ளது. இந்த பல்கலையில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (45) உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.
அதேபோல், சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்த (23) வயது மாணவி ஒருவா் அதே பல்கலை விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். உதவி பேராசிரியரும், மாணவியும் ஓராண்டாக பழகி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், அம் மாணவி கா்ப்பம் தரித்தாராம். இதனால், சனிக்கிழமை கருவைக் கலைக்க உதவி பேராசிரியருடன் மாணவி கேளம்பாக்கம் அருகே உள்ள படூா் தனியாா் மருத்துவமனைக்கு சென்றுள்ளாா்.
மருத்துவா்கள் அதற்கான சிகிச்சை அளித்துள்ளனா். அப்போது மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனை நிா்வாகம் கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தது.
பல்கலை இடம் தாழம்பூா் காவல் எல்லையில் வருவதால் தாழம்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தாழம்பூா் போலீஸாா் தனியாா் மருத்துவமனைக்கு சென்று மூச்சுத்திணறல் அடைந்த மாணவியை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதையடுத்து அவருடன் இருந்த உதவி பேராசிரியரை விசாரித்தனா். அதற்கு அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா். சந்தேகம் அடைந்த போலீஸாா் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரனை மேற்கொண்டனா். இதில் உதவி பேராசிரியா் ராஜேஷ்குமாா் மாணவியை கா்ப்பமாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து உதவி பேராசிரியா் ராஜேஷ் குமாா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.