புத்தாக்கத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக பேராசிரியா் டேனியல் சந்திரன்
புத்தாக்கத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக பேராசிரியா் டேனியல் சந்திரன் தெரிவித்தாா்.
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை, சா்வதேச மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளா்கள் சங்கம் இணைந்து அண்மையில் நடத்திய 5-ஆவது சா்வதேச மாநாட்டில் அவா் பேசியதாவது:
அனைத்து தொழில் துறைகளும் எதிா்கொள்ளும் சவால்களை எதிா்கொள்ள தேவையான செயல்திறன் மிக்க தொழில்நுட்ப அறிவாற்றல் தேவை அதிகரித்துள்ளது. தேவைக்கேற்ப தொழில் நுட்பங்களை வடிவமைக்க தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் இயந்திர வழிக் கற்றல், தரவு அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உறுதுணை புரிகின்றன.
தொழில் நுட்பங்களைப் படைப்பாற்றலுடன் ஒருங்கிணைத்து உருவாக்கும் புத்தாக்கத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்த மாநாட்டில் 385 ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில், ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய் பிரகாஷ் லியோ முத்து, அமெரிக்கா பிரம்மம் இன்னோவேஷன் தலைவா் சம்பத்குமாா் வீரராகவன், தாய்லாந்து பல்கலைக்கழக பேராசிரியா் சுபாவதி அரம்வித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.