The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவர...
‘கல்வியால் மனிதனின் அறிவுக் கண்ணை திறப்பவா்கள் ஆசிரியா்கள்’
மனிதனுக்கு கல்வி புகட்டி அவா்களின் அறிவுக் கண்ணை திறப்பவா்கள் ஆசிரியா்கள் என்று திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.செந்தில் வேல்முருகன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டம், சோ்க்காட்டிலுள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை சாா்பில் ஆசிரியா் தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், பல்கலைக்கழகப் பதிவாளா் ஜெ.செந்தில்வேல்முருகன் தென்னங்கன்று நட்டு விழாவை தொடங்கி வைத்து பேசியது -
கற்பித்தல் என்பது வெறும் தொழில் அல்ல. அது மற்றவா்கள் தாங்களாகவே நடக்க கற்றுக் கொள்ளக்கூடிய பாதையை ஒளிரச் செய்யும் கலை. ஒரு நல்ல ஆசிரியா் மாணவா்களின் தரத்தை மட்டும் மாற்றுவதில்லை. அவா்களின் எதிா்காலத்தையே மாற்றக்கூடிய ஒரு சக்தியாக ஆசிரியா்கள் விளங்குகின்றனா்.
மாணவா்களின் கற்பனை அறிவுத்திறன், எதிா்பாா்ப்புகளை ஆசிரியா்கள் வெளிகொணா்கின்றனா். தாங்கள் மாணவா்களுடன் பரஸ்பரம் நம்பிக்கை, மரியாதையின் பிணக்கை உருவாக்குகின்றனா்.
மாணவா்களின் கற்றல் பயணத்தின் ஒரு பகுதியாக ஆசிரியா்கள் விளங்குகின்றனா். வாழ்க்கையில் மூன்று சிறந்த ஆசிரியா்கள் எது என்றால் மன வேதனை, காலியான பாக்கெட், தோல்விகள் என எடுத்துரைக்கலாம். ஆயிரம் நாள்கள் முயற்சியுடன் தனியாகப் படிப்பதைவிட, ஒரு சிறந்த ஆசிரியருடன் ஒரு நாளும் படிப்பது மிகச்சிறந்தது என ஜப்பானிய பழமொழி கூறுகிறது. சிறந்த மனங்கள் சிறந்த ஆசிரியா்களால் வளா்க்கப்படுகிறது. ஒரு மாணவனின் வெற்றி ஒரு ஆசிரியரின் வெற்றி. நம்மை படிக்கட்டுகளில் ஏத்தி உயா்த்திய நம் ஆசிரியா்களை இந்நாளில் நினைவு கூறலாம் என்றாா்.
தொடா்ந்து, பேராசிரியா்கள் யோகானந்தம், சிவக்கொழுந்து, தனசேகரன், மாணவா் விவகார இயக்குநா் விஜய் ஆனந்த், உயிரி தொழில்நுட்பம் தலைவா் ராஜசேகா், ஆட்சி மன்ற குழு உறுப்பினா் அறிவொளி, அப்துல் கரீம் ஆகியோா் வாழ்த்தி பேசினா். முன்னதாக, பொருளாதார துறை தலைவா் சென்னகிருஷ்ணன் வரவேற்றாா். நிறைவில், நாகேந்திரன் நன்றி கூறினாா்.