'கல்வி நிதி கொடுக்க மறுப்பு' - தேசிய கல்விக்கொள்கையை ஏற்க நிர்பந்திக்கிறதா மத்திய அரசு?
மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு பி.எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் ரூ.27,360 கோடி செலவில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் இருக்கும் பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 60% மத்திய அரசின் பங்களிப்பும், 40% மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும். இந்த திட்டத்திற்கான பலனைப் பெற வேண்டும் என்றால் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு தேர்வு செய்யப்படும் பள்ளிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும். ஆனால் இந்த திட்டத்தில் இணையத் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை மத்திய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், "2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி. இதற்கான முன்மொழிவுகள் கடந்த ஏப்ரலிலேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான ரூ.573 கோடி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. விவாதங்கள் தேவைப்படும் தேசிய கல்விக் கொள்கையினை, கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது" எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும் மத்திய அரசு நிதியினை விடுவிக்காமல் இருக்கிறது.
இந்தசூழலில்தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா, "தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்கம் நிதி எப்போது ஒதுக்கப்படும்" என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், "2024-25ம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பிஎம்ஸ்ரீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு உறுதிமொழி அளித்தது. இதையடுத்து தமிழக அரசுக்கு ஒரு ஒப்பந்த வரைவு அனுப்பப்பட்டது. பிறகு தமிழக அரசு ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது. அதில் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ முழுமையாக செயல்படுத்துவது தொடர்பான முக்கியமான பத்தி நீக்கப்பட்டிருந்தது. பிறகு மத்திய அரசு அனுப்பிய ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கையெழுத்திட வேண்டும் என தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "இதைத்தான் பாசிசம் என்கிறோம். மாநில அரசின் உரிமையை தொடர்ச்சியாக மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. தற்போது செய்திருப்பது பாசிசத்தின் உச்சம். தரமான கல்வி கொடுக்க வேண்டும் என சொல்வது வேறு. கல்வியை காவி நிறத்தில் மாற்ற வேண்டும் என நினைப்பது வேறு. அவர்கள் தேசிய கல்வி கொள்கையின் மூலமாக காவி நிறத்தில் கல்வியை மாற்ற துடித்து வருகிறார்கள். எனவேதான் ஏற்க முடியாது என தெரிவித்திருக்கிறோம். தொடர்ச்சியாக மாநில அரசின் உரிமைகளுக்காக தி.மு.க போராடும்" என்றார்.
இதுகுறித்து பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் விளக்கம் கேட்டோம், "மத்திய அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகளை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். அவர்கள் சொல்வதுபோல காவி நிறத்தில் அதில் ஒன்றும் இல்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்கள். அப்படித்தான் இந்த விஷயத்திலும் செய்கிறார்கள். இது தவறான அணுகுமுறை" என்றார்.