களக்காடு - மதுரை பேருந்து ரத்து: மக்கள் அவதி!
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.
களக்காடு, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை. கடந்த ஓராண்டுக்கு முன் பாபநாசம் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து களக்காடு - மதுரைக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இந்தப் பேருந்து காலை 8 மணிக்கு களக்காட்டில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து பகல் 1 மணிக்கு களக்காட்டுக்கும் இயக்கப்பட்டது.
இந்தப் பேருந்து கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், மருத்துவ வசதி பெற மதுரைக்குச் சென்று வருபவா்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், ஜூன் மாத இறுதியில் இந்தப் பேருந்து மதுரைக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. பின்னா் களக்காடு - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 3நாள்களாக இந்தப் பேருந்து இயக்கப்படவில்லை.
நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் களக்காட்டிலிருந்து மதுரைக்கு இயக்கவும், மதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு களக்காட்டுக்கு மற்றொரு கூடுதல் பேருந்து இயக்கவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்ைஎடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.