புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: "கலவர வழக்கில் மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?" - CPI(M) கண்டனம்
கள்ளக்குறிச்சியில் 2022, ஜூலை 13-ம் தேதியன்று, கனியாமூர் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில், மாணவி தற்கொலை செய்துகொண்டதாகப் பள்ளி தரப்பில் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மாணவியின் குடும்பத்தினர் உட்பட ஊரார் பள்ளிக்கெதிரே நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த சம்பவத்தில், பள்ளி நிர்வாகத்தின் பேருந்துகள் எரிக்கப்பட்டன. மேலும், பல பொருள்கள் சேதாரமாக்கப்பட்டன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/cisflsj0/65532abea9265.jpg)
இதுதொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர். பின்னர், இந்த விவகாரம் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வாறிருக்க, உயிரிழந்த மாணவியின் தாயாரைக் கலவர வழக்கில் முதல் குற்றவாளியாகப் பதிவுசெய்து, மொத்தமாக 916 பேர் மீது குற்றம்சாட்டி, 24,000 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி தற்போது தாக்கல் செய்திருப்பது விவாதப்பொருளாகியிருக்கிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா என சி.பி.சி.ஐ.டி குற்றப்பத்திரிகைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்த அறிக்கையில் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், ``கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில், தனியார் பள்ளி ஒன்றில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி, மாணவியொருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கில் பல்வேறு முரணான தகவல்கள் வெளிப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகத்தையும் வழக்கில் உள்ளடக்கி முறையாக விசாரிக்க வலியுறுத்தி அனைத்து தரப்பினரும் போராடினர். மாணவியின் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மாணவியின் தாயார் செல்வி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-05/k4eahjl5/043885aa-1a81-4496-98fe-87abdafafcc7-1.jpg)
இந்த வழக்கு விசாரணை நடந்த அதே தேதியில் ஜூலை 17ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையை அனைத்து தரப்பாருமே கண்டித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்றமே இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த வன்முறை தொடர்பாக விசாரித்த சிபிசிஐடி போலீசாரின் குற்றப்பத்திரிக்கையில் 916 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும், அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளியாகயும், தாய் மாமன் கரிகாலன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். ஜூலை 13 ஆம் தேதி மகளை இழந்து நீதிக்காகப் போராடி வந்த ஒருவர் 4 நாள்கள் இடைவெளியில் இவ்வளவு பெரிய வன்முறையை உருவாக்கினார் என்று சொல்வது நம்பத்தகுந்ததல்ல. மாணவி மரணத்திற்கு நியாயம் கேட்கும் வழக்கில் குடும்பத்தினர் உறுதியாக உள்ள நிலையில் இவ்வாறு குற்றம் சாட்டுவதும் ஒருவகையான மிரட்டலாகும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். தனியார்ப் பள்ளி நிர்வாகத்தினர் சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்ட சமயத்தில், எந்த விசாரணையும் இல்லாமலே பள்ளி நிர்வாகத்திற்கு நற்சான்று கொடுத்து விடுதலை செய்தது நீதிமன்றம். அப்போதும் காவல்துறை அந்த பிணை உத்தரவைக் கேள்வியெழுப்பவில்லை.
மாணவி ஸ்ரீமதி மரணம் : கலவர வழக்கில் மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா? சிபிசிஐடி யின் குற்றப்பத்திரிக்கைக்கு #CPIM கண்டனம்! pic.twitter.com/g5Rw8DWlhU
— Shanmugam P (@Shanmugamcpim) February 11, 2025
இப்போது கலவரம் தொடர்பான வழக்கில், தவறு செய்தவர்களோடு நியாயம் கேட்டு போராடியவர்களையும் குற்றவாளியாகச் சேர்த்திருக்கிறார்கள். மேலும், ஜூலை 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பெருந்திரளாக மக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களைப் பார்த்திருந்த காவல்துறைக்கு 17 ஆம் தேதி நடந்த போராட்டம் குறித்த எந்த தகவலும் தெரியாதது ஆச்சரியம்தான். தெரியாதா அல்லது உளவுத்துறைக்குத் தெரிந்தும் இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, விசாரணையை நான்கு நாள்கள் தாமதப்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கோரியிருந்தோம். இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்தனர். இதனை எதிர்த்து இவ்வழக்கைக் கொலை வழக்காக மாற்ற வேண்டுமென்று மாணவியின் தாயார் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். தாயாரின் இந்த போராட்டத்தை முடமாக்க வேண்டுமென்றும், யாரையோ காப்பாற்றுவதற்காக வன்முறைச் சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத மாணவியின் தாயார், தாய்மாமன் கரிகாலன் மற்றும் அப்பாவி மக்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குத் தொடுத்துள்ளது இவ்வழக்கை முடமாக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டதாகும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-03/7be57059-72c0-4ac8-949d-8877cc06390c/cbcid.jpg)
இந்தப் போக்கு வழக்கு விசாரணையை முற்றாக திசைதிருப்பி, தவறு செய்தவர்கள் தப்பிக்கவே வழிவகுக்கும். அதுமட்டுமின்றி சிபிசிஐடி போலீசார் வன்முறை நடந்த இடத்தில் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள், அவ்வழியாகச் சென்றவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என அப்பாவி பொதுமக்கள் மீதும், அப்பகுதியில் வாழும் ஏராளமான பொதுமக்கள் மீதும் வழக்குத் தொடுத்தனர். சுமார் 60-70 பேர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-20/waesus75/GgsK_gIWcAAarkG.jpg)
இவையெல்லாம் மோசமான அராஜக நடவடிக்கையாகும். மாவட்ட நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் செய்த தவறுகள் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. சிபிசிஐடி காவல்துறையினரின் நடத்தைகள், பள்ளி நிர்வாகத்தின் தரப்பையும், மாவட்ட நிர்வாகத்தையும் காப்பாற்றி மாணவியின் மரண வழக்கைச் சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இந்த போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, பாரபட்சமற்ற நீதியை உறுதி செய்ய பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது." என்று வலியுறுத்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb